மத்திய கிழக்கு போர் தாக்கம் : உணவு விலைகள் வரலாறு காணாத உயரத்தில்!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மோதல்கள் காரணமாக, உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மார்ச் மாதத்தில் பாரிய உயர்வைச் சந்தித்துள்ளன.
இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரான மிக உயர்ந்த மட்டம் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமையே இந்த விலையேற்றத்திற்கு முதன்மைக் காரணமாகும்.
தற்போதைய போர்ச் சூழல் மேலும் 40 நாட்களுக்கு மேல் நீடித்தால், எரிபொருள் மற்றும் உரம் போன்ற உற்பத்திச் செலவுகள் மிக உயர்மட்டத்தில் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக விவசாயிகள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளைக் குறைக்க முற்படலாம் எனவும், இது இந்த ஆண்டு மட்டுமன்றி அடுத்த ஆண்டின் உணவு விநியோகத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என FAO சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தரவுகளின்படி, உலக உணவு விலைச் சுட்டெண் பெப்ரவரி மாதத்தை விட 2.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.இதில் சீனியின் விலை 7.2 வீதமாகவும், தாவர எண்ணெய் விலை 5.1 வீதமாகவும், கோதுமை விலை 4.3 வீதமாகவும் உயர்வடைந்துள்ளது.
எவ்வாறாயினும், அறுவடைக்காலம் மற்றும் இறக்குமதி கேள்வி குறைவடைந்ததால் அரிசி விலை மாத்திரம் 3.0 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.