CPL சாதனையை முறியடித்த தசுன் ஷானக!

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிவேக சதத்தை அடித்து, தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக்கின் 25 ஆவது போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி பாசெட்டெர் மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லூசியா கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷானக 43 பந்துகளில் 121 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
அவர் வெறும் 39 பந்துகளில் இந்தப் போட்டியில் சதம் விளாசினார்.
இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்குகின்றன. அவர் 281.39 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார்.
தசுன் ஷானகவின் இந்த சதமானது, இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவர் குறைந்த பந்தில் பெற்றுக் கொண்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன் CPL இல் ஆண்ட்ரே ரஸ்ஸல், டிம் சீஃபர்ட் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் 40 பந்துகளில் சதம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தசுன் ஷானக அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.
பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 13.5 நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 137 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி சார்பில் அதிகப்பட்சமாக டிம் சீஃபர்ட் 50 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் ஜெரேமியா லூயிஸ் 5 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் அஷ்மீட் நெட் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.




