அபிவிருத்தித் திட்டங்களை முடிக்க 3 மாத காலக்கெடு – பிரதமர் அதிரடி அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காக அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீடுகளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு மாவட்டத் திட்டமிடல் குழுவின் முன்னேற்ற ஆய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலின்போது கொழும்பு மாவட்டச் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பரவலாக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட வேலைத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம், “பிரஜா சக்தி” வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் விளையாட்டுக் கலாசாரம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, மேல் மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டம், உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களால் கொழும்பு மாவட்டத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்துத் தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதன் மூலம், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும், தடையின்றித் திட்டங்களை விரைவாக நிறைவு செய்து மக்களுக்குப் பலன்களைப் பெற்றுக்கொடுக்கவும் முடியும் என பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இந்த அனைத்துத் திட்டங்களினதும் முதன்மை நோக்கம் வறுமையை ஒழிப்பதே ஆகும் என்பதால், அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த அளவுகோல்களை உருவாக்கி, அவற்றின் ஊடாகத் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அந்த வேலைத்திட்டங்களின் தரத்தையும் நீண்டகாலப் பலனையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன், காணிகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளின் பொறுப்பை ஏற்பதற்கு எந்தவொரு நிறுவனமும் இல்லாதிருந்த முன்னைய பிரச்சினை குறித்துக் கவனம் செலுத்திய பிரதமர், பொறுப்பேற்கும் நிறுவனம் எதுவும் இல்லாத வீதிகளோ கால்வாய்களோ இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
இதன்போது, கால்வாய்கள் மற்றும் ஆறுகளின் உரிமை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், இனிவரும் காலங்களில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும்போது அதனைப் பிரச்சினையாக்கிக் கொள்ள வேண்டாம் என பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அருண பனாகொட, அசித நிரோஷன, தேவானந்த சுரவீர, கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனககுமார ஆகியோர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திட்டமிடல் குழுவின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.