ஹோமாகம பேருந்து தரிப்பிடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!

கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பிட்டிப்பன பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பான அறிக்கையை சமர்பித்ததை அடுத்து, நீதிமன்றம் இந்த அபராத தொகையை விதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னர், குறித்த பேருந்து தரிப்பிடத்துக்கு பொது சுகாதார பரிசோதகரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 422 ஆக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினத்துடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக தினசரி டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதன்முறையாக நாளாந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 69 ஆக பதிவானதுடன், ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆயிரத்து 30 பேரும், அதனைத் தொடர்ந்து மறுநாள் ஆயிரத்து 217 டெங்கு நோயாளர்களும் பதிவாகியிருந்தனர்.
இதேவேளை, டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதுடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் மாத்திரம் இரண்டாயிரத்து 343 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் விராய் கெலி பால்தசார் தெரிவித்துள்ளார்.