ரத்மலானாவில் Y-12 விமானத்திற்கு பட்டம் நூல் சிக்கல்!

இன்று (15) பயிற்சிக்காக ரத்மலானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டY-12 ரக விமானம், பட்டத்தின் நூல் சிக்கியதால் மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், விமானத்தின் இடது சக்கரம், இடது எஞ்சின் பகுதி மற்றும் பல பாகங்களில் பட்டத்தின் நூல்கள் கடுமையாகச் சிக்கியிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விமானப்படை, பட்டம் நூல்களோ அல்லது அதன் பாகங்களோ விமானத்தின் இயந்திரத்திலோ அல்லது அதன் இயக்க முறைமையிலோ நுழைந்தால், முழு விமானமும் விபத்தில் சிக்கும் நேரடி அபாயம் உள்ளது என்று கூறியுள்ளது.
இதன் விளைவாக, தற்போதைய பட்டம் விடும் பருவத்தால், தீவின் ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் பறக்கும் பட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து, விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது உலகெங்கிலும் விமான விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது விமான செயல்பாடுகளுக்கு ஒரு நேரடித் தடையாகவும் உள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராங்கொட, சீனக்குடா, அநுராதபுரம், பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகிய பிரதேசங்களிலுள்ள விமான ஓடுபாதைகளை சுற்றி பரந்து விரிந்த காத்தாடிகள் தற்போது அதிக அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அத்தகைய பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு விமானப்படை கேட்டுக்கொள்கிறது.