யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
எனினும், இரண்டாவது பிரதிவாதியான டெய்சி பொரஸ்ட் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கு உத்தரவிட்டார்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 57 மில்லியன் ரூபாய் நிதியை மூன்று வங்கிச் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றம்சாட்டி, யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




