நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் உட்பட இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடற்பரப்பைப் பொறுத்தவரை, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.




