2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தோட்டப் புறப் பாடசாலைகள் மீள்கட்டமைப்புக்கு கவனம்!

உள்ளூர்June 10, 2026 · 4 months முன்11
தோட்டப் புறப் பாடசாலைகள் மீள்கட்டமைப்புக்கு கவனம்!

‘திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த ஒவ்வொரு பாடசாலையின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு உத்தியோகத்தர்களுக்குப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கினார்.

தோட்டப் புறப் பாடசாலைகள் தொடர்பில் ஜூன் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

‘திட்வா’ சூறாவளியால் தோட்டப் புறப் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணி தொடர்பான பிரச்சினைகள், ஆசிரியர் வெற்றிடங்கள், பாடசாலை அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாணப் பணிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சூறாவளியினால் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த மற்றும் இடம்பெயர வேண்டியுள்ள பாடசாலைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சூறாவளியின் பின்னர் மாகாண சபைகள் ஊடாகப் பல்வேறு தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. அமைச்சின் அதிகாரிகள் இது குறித்து விழிப்புடன் செயற்பட்டு துல்லியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு பாடசாலைகளில் இணைத்தவுடன் அனைத்தையும் முடித்துவிட்டதாகக் கருத இயலாது. அந்த மாணவர்கள் முறையாகப் பாடசாலைக்கு வருகை தருகிறார்களா, கல்வி கற்கின்றார்களா மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன என்பது குறித்துப் பின்தொடர் கண்காணிப்பு அவசியம்.

சில பாடசாலைகளில் மாணவர்கள் இணைக்கப்பட்டாலும் அவர்கள் அங்கு செல்லவில்லை என அறியக்கிடைக்கிறது. அப்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியுங்கள். அதேபோல் தற்காலிகப் பாடசாலைகளை அமைப்பதிலும் விரைவாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தோட்டப் புறப் பாடசாலைகளுக்கென பிரத்தியேகமான உத்தியோகத்தர்கள் உள்ளனர். அவர்களுடன் ஒருங்கிணைந்து துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சபை அதிகாரிகளை இதன்போது முறையாக ஒருங்கிணைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நீங்களும் இந்த விடயங்களில் தலையிட வேண்டும்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் புதிய தமிழ் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இம்முறை இடம்பெறும் ஆசிரியர் ஆட்சேர்ப்பின் போது, மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நியமனம் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும்.

தோட்டப் புறப் பாடசாலை மாணவர்களின் 13 வருட இடைவிடா கல்வியை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மொழி மூலமான தொழில் கல்வி குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது, எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர்களான மதுர செனவிரத்ன, சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.