2026 September 24, Thursday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் – ITAKசபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைநீதித்துறை திருத்தம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை; மழை பாதிப்பு தொடரும்எரிபொருள் விலையில் மாற்றமா? மானியமா? பேச்சுவார்த்தை தீவிரம்

மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்

உலகம்September 24, 2026 · 1 hour முன்2
மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்

செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம் மற்றும் ஈரான் விவகாரம் வரை வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கும் வகையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரிதான முறையில் விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஆடம்பரமான வரவேற்பை அளித்தார். 

வொஷிங்டனுக்கு வெளியே உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளமான ‘ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்’ (Joint Base Andrews) சீன ஜனாதிபதி தனது விமானத்திலிருந்து இறங்கியதும், ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ஆகியோர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோருக்குக் கைலுக்கி வரவேற்பளித்தனர். 

நீண்ட கோட் மற்றும் கையுறைகளை அணிந்திருந்த ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர், இராணுவ இசைக்குழு தேசிய கீதங்களை இசைத்தபோது ஓடுபாதையில் அருகருகே நின்றனர். இரண்டு B-1 குண்டுவீச்சு விமானங்கள் பலத்த சத்தத்துடன் மேலே பறந்து சென்றது ட்ரம்பை அதிர்ச்சியடைய வைத்ததுடன், ஜெட் விமானங்களின் இரைச்சலால் அவர் முகத்தைச் சுளித்தார். 

ஆனால் அவரது சீன விருந்தினரோ எவ்வித சலனமுமின்றி அமைதியாக நின்றார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்தத் தனிப்பட்ட வரவேற்பானது மூன்று நாட்கள் நடைபெறும் ஆடம்பர நிகழ்வுகளின் தொடக்கமாகும். 

இதில் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெறும் அரசு விருந்து மற்றும் மற்றொரு விமான அணிவகுப்பு ஆகியவை அடங்கும். அமெரிக்க அதிகாரிகள் சீனத் தலைவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த நிலையில், ஓடுபாதையில் ஆறு F-22 போர் விமானங்களும் ஆறு F-16 விமானங்களும் அணிவகுத்து நின்றமை அமெரிக்காவின் இராணுவப் பலத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டு நான்கு மாதங்களின் பின்னர், ஜி ஜின்பிங் வொஷிங்டனுக்குப் பதில் பயணமாக வந்துள்ளார். 

இருதரப்பு உறவுகள் சீரான நிலையை எட்டியிருந்தபோதிலும், அடிப்படை மூலோபாயப் போட்டி பெரும்பாலும் மாறாமல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தச் சந்திப்பில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏதும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது. 

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே நிலவும் பலவீனமான இராஜதந்திர மற்றும் வர்த்தக அமைதியைத் தக்கவைப்பதே இந்த ஆடம்பரமான வரவேற்பின் முக்கிய நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சீன அரசு ஊடகங்களின்படி, ஜி ஜின்பிங்குடன் அவரது வலதுகரமாகச் செயல்படும் சாய் சி மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி உட்பட பலர் வருகை தந்துள்ளனர். 

வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெறும் அரசு விருந்தில் முக்கிய AI நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட முன்னணி அமெரிக்க தொழில்நுட்பத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ள போதிலும், ஜி ஜின்பிங்கின் தூதுக்குழுவில் சீன சிஇஓ-க்கள் (CEOs) யாரும் இடம்பெறவில்லை என்று இரண்டு நம்பகமான வட்டாரங்கள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. 

வெள்ளிக்கிழமை காலை இரு ஜனாதிபதி தம்பதியினரும் வெள்ளை மாளிகையில் தேநீர் அருந்திவிட்டு, பின்னர் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் வைக்கப்பட்டுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஜி ஜின்பிங்கின் விஜயம் நிறைவடையும்.