ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு பிரதமரின் செய்தி!

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்களிடம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்
உலகளாவிய அறிவால் வலுவூட்டப்பட்ட, சுயநம்பிக்கை நிறைந்த, சமூகத்திற்குத் தலைமைத்துவம் வழங்கக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதே அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு ஏராவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தின் மாணவ மாணவியர் சிலர், செப்டம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடும் கல்விச் சுற்றுலாவின்போது பிரதமரைச் சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கைப் பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு என்பன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காகச் செயற்படுத்தும் ‘Vision’ வேலைத்திட்டத் தொடருக்கு இணையாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, ஜனாதிபதி செயலக வளாகத்திலுள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட்டதை அடுத்து, இலங்கையின் பாராளுமன்ற வரலாறு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
அத்தோடு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் பணி மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக அதன் மூலம் ஆற்றப்படும் சேவைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஞாபகார்த்தச் சின்னமாகப் பாடசாலைக்குப் பெறுமதிமிக்க மரக்கன்றுகளை வழங்கி வைப்பதும் இவ்வேலைத்திட்டத்திற்கு இணையாக இடம்பெற்றது.
இச்சுற்றுலாவில் முப்படைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், ஏராவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவான மாணவ மாணவியர்களும் கலந்துகொண்டனர்.




