மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி நிதியத் திட்டம் விரிவாக்கம்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் முதல் நிகழ்ச்சி, இன்று (26) முற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் புதிய வேலைத்திட்டமாக 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 2023/2024 கல்வி ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவு ரீதியாகவும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் பாராட்டப்பட்டனர்.
அதன்போது, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் உயர் சித்திகளைப் பெற்ற தலா பத்து மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன், இம்முறை அந்தத் தொகையை இருபது மாணவர்களாக அதிகரித்திருப்பது சிறப்பம்சமாகும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 3,000 க்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை பாராட்டப்படுவதுடன், ஒவ்வொரு மாணவருக்கும் 100,000 ரூபா நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய 05 மாவட்டங்களில் 06 பாடப்பிரிவுகளின் கீழ் முதல் இருபது இடங்களைப் பெற்றுக் கொண்ட 480 மாணவர்கள் இதன்போது பாராட்டப்பட்டனர்.
நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக தற்போதைய அரசாங்கம் அதிகபட்ச பங்களிப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருவதாக இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். அந்தப் பயணத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் ஜனாதிபதி நிதியம், பொருளாதார ரீதியில் சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்காகப் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், இந்த ஆண்டும் அந்த வேலைத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன,
“நாட்டின் எதிர்கால சந்ததியினர் என்பவர்கள் முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் நாட்டின் ஜீவநாடியாவர். அதில் கல்வி மிகவும் முக்கியமானதாகும். அதற்காக தற்போதைய அரசாங்கம் ஆகக்கூடுதலான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் செய்து வருகின்றது. அந்தப் பயணத்திற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் ஜனாதிபதி நிதியம் பல கடினமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை இதுவரை எடுத்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 01 ஆம் இடத்திலிருந்து 10 ஆம் இடம் வரை பெற்ற, 2,960 மாணவர்களுக்கு 296 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களை ஜனாதிபதி நிதியம் வழங்கியது. இந்த ஆண்டு ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் 01 முதல் 10 வரை மட்டுமல்லாமல், 1 முதல் 20 வரை இடங்களைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா நிதி உதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளைக் கொண்ட பிள்ளைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே ஜனாதிபதி நிதியம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கின்றது.”
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்
வடமாகாணத்தின் மாணவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான ஒரு நாளாகும். இதுவரை ஜனாதிபதி நிதியத்தினால் இந்த பிரதேசத்தில் வறுமையில் இருந்த மாணவர்களுக்கோ அல்லது திறமையானவர்களுக்கோ எந்தவித நன்மைகளும் கிடைக்கிவில்லை என்றே கூற வேண்டும். அவ்வாறு இருந்த இந்த நிதியம் தற்போது மக்கள் மயமாக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த நிதியம், இந்நாட்டின் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் பிரதேச செயலகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதனால் தற்போது சாதாரண மக்களும் தமது பிரதேச செயலகங்கள் ஊடாக இந்த நிதியத்தினால் பயனடைகின்றனர். இந்த புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் நிகழ்வும் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு நாடு பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக எமது அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தின் காரணமாக பின்தங்கிய நிலைமையில் உள்ள எமது மாகாணத்தின் கல்வித்துறையை முன்னேற்றவே இவ்வாறான வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அது மட்டுமன்றி இந்த நாட்டின் மிகப்பெரிய வளம் மனிதவளமாகும். அந்தவகையில் மனித வள மேம்பாட்டிற்காக இந்நாட்டுக் கல்வித்துறையை முன்னேற்ற எமது அரசாங்கம் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
கல்வியின் மூலமே எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே எமது நம்பிக்கை.
ஆனால் அந்தக் கல்வி முன்னேற்றத்தை வீழ்ச்சியடைச் செய்யும் ஒன்றாக இன்று போதைப்பொருள் அச்சுறுத்தல் மாறியுள்ளது. மாணவர்களுக்கு மத்தியில் மிக வேகமாக போதைப்பழக்கம் பரவிவருகின்றது. எனவே அந்த போதைப்பொருளை முற்றாக ஒழிக்கவே “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
மேலும், கடந்த காலத்தில் இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததால் பெரும்பாலான கல்வியியலாளர்கள் போதுமான அளவு சம்பளம் இல்லாததன் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றனர். எமது மாணவர்களுக்கு மத்தியிலும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற மனப்பதிவே காணப்படுகின்றது. அதனை தடுத்து, இது எமது நாடு, நாமே இதனை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் எமது அரசாங்கம் சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், நீதியற்ற, சமத்துவமற்ற ஆட்சியின் காரணமாக இந்த நாடு வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் நீதியானதும் அனைத்து மக்களினதும் நம்பிக்கையைப் பெற்ற ஒரு அரசாங்கம் இன்று உருவாகியுள்ளது. அதற்கான ஒரு நடவடிக்கையாகவே நேற்று 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. நீதியான ஒரு அரசாங்கம் உருவாகியுள்ளதால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்பிவந்து எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று மனநிலைக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் பாரிய அபிவருத்தி திட்டங்களை எமது அரசாங்கம் செயற்படுத்தவுள்ளது. அப்போது அவற்றை பொறுப்பேற்க சிறந்த மனித வளங்களாக எமது மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில், இன்று தமது சிறப்பான பெறுபேறுகளின் காரணமாக புலமைபரிசில்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களை பாராட்டுவதுடன், இந்த நாட்டை சிறந்த ஒரு நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு சிறப்புரை ஆற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல்,
“கடந்த ஆண்டு இந்த புலமைப்பரிசில் ஒரு பாடத்தில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற 10 மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அது, 20 மாணவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நமது நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் பயணத்தைத் தொடங்கியுள்ளது என்பதை இது மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. அதேபோல், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி நிதியம் என்றாலே, மிகக் கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தவர்களால் கூட எந்தவித உதவியையும் பெற்றுக்கொள்ள முடியாத, மிகவும் சிரமப்பட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு இடமாகவே அது எமது நினைவுக்கு வந்தது.
அது மாத்திரமின்றி, மிகவும் செல்வந்தர்களான அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி நிதியத்தைப் பயன்படுத்தியதாக எமக்கு அறியக்கிடைத்தது. அப்படியானால், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது, இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன, அல்லது இந்த மாற்றமானது நமக்கு எடுத்துக் கூறும் விடயம் என்ன என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியம். இதன் மூலம் அபிவிருத்தி மற்றும் குறிப்பாக மனித வளத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் கிராமப்புறங்களை நோக்கிச் செல்ல ஆரம்பமாகியுள்ளது தெரிகிறது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை கிராமிய மட்டத்திற்குக் கொண்டு செல்வது மிக முக்கியமானதாகும். அரச நிறுவனங்கள், குறிப்பாக ஜனாதிபதி நிதியம் கூட விரிவுபடுத்தப்படுவதன் மூலம் அரசாங்கம் நீண்டகால அரசியல் கோரிக்கைகள் மீது காட்டும் அவதானம் தெளிவாகிறது.
குறிப்பாக நமது நாட்டில் பெறப்பட்டுள்ள இந்த வெற்றிகளில் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. அதன்படி, நாட்டின் எதிர்காலப் பயணத்தைத் தீர்மானிப்பதில் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மிக முக்கியமானதாக அமைகிறது. நாம் அடைந்துள்ள இந்த மாற்றத்தையும், அந்த மாற்றத்திற்குக் காரணமான விடயங்களையும் கவனிக்கும்போது அது நன்றாகப் புலப்படுகிறது. பல்கலைக்கழக வாழ்க்கையின் மூலம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் மூலமாகத்தான் சமூகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், ஒரு குழுவாகச் செயற்படவும் இயலுமை கிடைக்கின்றது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் கிடைக்கும் இந்த ஆதரவின் ஊடாக இநாட்டின் எதிர்கால மனிதவளம், மேம்பட்ட மனிதவளமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.”
வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்லத்தம்பி திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன், உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




