முழு நீதிபதிகள் அமர்வு வேண்டுமா? தீர்மானம் விரைவில்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மீதான தீர்மானத்தை அறிவிப்பதற்காக, மனுக்கள் மீதான விசாரணையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே, மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
அதற்கமைய, தற்போது உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் அமர்ந்து இந்த மனுக்களை பரிசீலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு மேலதிகமாக, மேலும் ஒரு குழுவினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெஃப்ரி அழகரத்னம், எராஜ் சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெத்தேகொட, மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகளும் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், ஒரு நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது எனச் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின் கீழ் நீதிபதிகள் அமர்வின் நீதிபதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் விருப்புரிமை பிரதம நீதியரசருக்கு உள்ளது எனச் சுட்டிக்காட்டிய சொலிசிட்டர் ஜெனரல், இந்த விடயத்தில் வேறு எந்தத் தரப்பினரும் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இடைமனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நைஜல் ஹேட்ச் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது, நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் விருப்புரிமை பிரதம நீதியரசரிடமே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.
முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்களையும் பரிசீலித்த நீதிமன்றம், தமது தீர்மானத்தை அறிவிப்பதற்காக விசாரணையை இவ்வாறு ஒத்திவைத்தது.




