எதிர்கால தொழில் சந்தைக்கு ஏற்ற திறன்களுடன் மாணவர்களை உருவாக்குவோம்” – பிரதமர்!

உலகை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பார்க்கக்கூடிய திறமைமிக்கவர்களே நமது பிள்ளைகள் என்றும், அவர்களை புதிய தொழினுட்பத்தாலும் அறிவாலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பலாங்கொடை வித்யாலோக வித்தியாலயத்தில் ஜூலை 04ஆம் திகதி நடைபெற்ற ‘அருமெசிய’ கண்காட்சியைத் திறந்து வைத்தல் மற்றும் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வித்யாலோக வித்தியாலய மாணவர்களின் புத்தாக்கங்கள் மற்றும் திறமைகளை உள்ளடக்கிய இக்கண்காட்சியைத் திறந்து வைத்த பிரதமர், அவர்களின் திறமைகளைப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
எமது நாட்டின் முதலாவது பெண் பிரதமர் கல்வி கற்ற பலாங்கொடை வித்யாலோக மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் நடைபெறும் இந்த விசேட விழாவில் கலந்துகொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வித்தியாலய மாணவச் செல்வங்களின் அரிய படைப்புகள் மற்றும் புத்தாக்கங்களை உள்ளடக்கிய கண்காட்சியை நான் பார்வையிட்டேன். வெறும் பாடப்புத்தகங்களுக்குள் மாத்திரம் முடங்கிவிடாமல், உலகை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பார்க்கக்கூடிய திறமையான பிள்ளைகள் நம்மிடம் உள்ளனர் என்பதை நான் அங்கு கண்டுகொண்டேன்.
மனப்பாடம் செய்யும் பரீட்சை மையக் கல்வி முறையிலிருந்து விடுபட்டு, நடைமுறைச் சாத்தியமான, திறன்கள் நிறைந்த புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையொன்றை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வருகின்றோம். இதன் கீழ், வரவிருக்கும் 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கான அனைத்து முதற்கட்ட ஆயத்தங்களையும் தற்போது திட்டமிட்ட படி நாம் மிக நேர்த்தியாக நிறைவு செய்து வருகின்றோம்.
பாடசாலையை விட்டு பொது உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளுக்குப் பொருத்தமான, தொழில் சந்தையில் அதிக தேவையுள்ள தொழினுட்ப, தொழிற்பயிற்சியை வழங்குவதே எமது இன்றியமையாத இலக்காகும். பல்கலைக்கழகக் கல்வியைப் போன்றே, தொழிற்கல்வியும் சமமான மதிப்பும் அந்தஸ்தும் கொண்ட ஒரு துறையாக நாம் மாற்றி அமைப்போம்.
இறுதியாக, இக்கண்காட்சியை ஏற்பாடு செய்த பலாங்கொடை வித்யாலோக மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாமிற்கும், இக்கண்காட்சியை வெற்றிகரமாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அன்பு மாணவச் செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ, பலாங்கொடை நகர முதல்வர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர், வித்யாலோக மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.




