சீருடை விவகாரத்தை இன முரண்பாடாக மாற்ற வேண்டாம் – MP சாணக்கியன்

இன்று (20) பாராளுமன்றத்தில் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல்
தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட நிலையில், சட்டமூலத்தை
நிறைவேற்றுவதுடன் மாத்திரம் அரசாங்கத்தின் பொறுப்பு முடிவடையாது என
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்
தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், குறிப்பாக
மலையகப் பெண்கள் இன்றும் பெருந்தோட்டங்களில் பாதுகாப்பற்ற நிலையில்
தொழில் புரிந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
மலையகப் பெண்கள் நீண்டகாலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு தங்களது உழைப்பை
வழங்கி வருகின்ற போதிலும், அவர்களின் தொழில் பாதுகாப்பு, வாழ்வாதார
பாதுகாப்பு மற்றும் அடிப்படை வாழ்க்கை உரிமைகள் தொடர்பில் போதுமான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தொழில் உரிமைகளைபாதுகாப்பதற்கும் தேவையான சட்டத்திருத்தங்களும் சாதகமான முன்மொழிவுகளும்
போதுமான அளவில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் காணி
உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும்
சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
“சம்பளத்தை அதிகரிப்பதால் மாத்திரம் பெருந்தோட்ட மக்களின் அனைத்து
பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கிவிட்டதாக கூற முடியாது. அவர்களுக்கு
சொந்தமான காணி, பாதுகாப்பான வீடு, குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என அவர்
தெரிவித்தார்.தித்வா புயலின் தாக்கத்திற்குப் பின்னரும் மலையக மக்களின் வீடு மற்றும்
காணி தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு
வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகம்
பாதிக்கப்படக்கூடிய மக்களாக மலையக மக்கள் காணப்படுவதாகவும், அவர்களின்
வாழ்க்கைக்கான நிரந்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் இதேவேளை, கல்முனை ஆதார
வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் சீருடை
தொடர்பான விவகாரம் குறித்தும் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில்
கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரத்தின் பின்னணியை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என
தெரிவித்த அவர், சீருடை தொடர்பான சுற்றுநிரூபத்தை வெளியிட்டது அரசாங்கம்
என்பதால், அதில் பிரச்சினை இருப்பின் அதனை அரசாங்கமே திருத்த வேண்டும்
எனக் குறிப்பிட்டார்.
முஸ்லிம் பெண்கள் தங்களது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு
சேவையில் ஈடுபடக்கூடிய வகையில் சுற்றுநிரூபத்தில் தேவையான திருத்தங்களை
மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மூவின மக்களும் தங்களது மதம் மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றுவது அவர்களது
மத சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் எனவும், இந்த விடயத்தை தமிழ் –
முஸ்லிம் இன முரண்பாடாக மாற்றக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சீருடை விவகாரத்தில் தமிழ் மக்களையும் தமிழ் அதிகாரிகளையும்
தேவையில்லாமல் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர்
குறிப்பிட்டார்.
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி
தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதை விரும்பாத
இரண்டு தரப்புகள் இருப்பதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
ஒரு தரப்பு அரசாங்கம் எனவும், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து
செயற்பட்டால் எதிர்காலத்தில் அது அரசாங்கத்திற்கு சவாலாக அமையும் என
அரசாங்கம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு தரப்பு இனவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை
முன்னெடுப்பவர்கள் என தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்
மக்களையும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களையும் நிறுத்தி,
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் இலாபம்
பெறுவதே அவர்களின் நோக்கம் என குற்றஞ்சாட்டினார்.
இந்த இரண்டு தரப்பினரும் தற்போதைய கல்முனை வைத்தியசாலை விவகாரத்தை
பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதை அவதானிக்க முடிவதாகவும் அவர்
தெரிவித்தார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் வைத்தியர் சுகுணன்
தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் சாணக்கியன்
இராசமாணிக்கம் கடுமையாக விமர்சித்தார்.
வைத்தியர் சுகுணன் மொசாட் அமைப்புடன் தொடர்புபட்டவர் எனக் கூறுவது
பொறுப்பற்ற செயற்பாடு என தெரிவித்த அவர், சுற்றுநிரூபத்தை
திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தனிநபர்களை இலக்கு வைத்து
குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்
குறிப்பிட்டார்.
வைத்தியர் சுகுணன் வீதி விபத்துக்குள்ளாகி சுயநினைவின்றி நான்கு நாட்களாக
வைத்தியசாலையில் இருந்த நிலையில், அவரை இந்த விவகாரத்துடன்
தொடர்புபடுத்தி கருத்துக்களை வெளியிடுவது நியாயமானதல்ல எனவும் அவர்
தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் சுகாதார அமைச்சில் பிரதி அமைச்சு மற்றும்
இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் இந்த சுற்றுநிரூபம் தொடர்பில்
ஏன் அப்போது பேசவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
தமிழ் பேசும் கட்சிகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்
தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள்
இருப்பதை மறுக்கவில்லை என தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம், பல்வேறு
தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றை பேச்சுவார்த்தைகள்
ஊடாக தீர்ப்பதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு தமிழ் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்ட
பின்னர், அவர் தமிழர் என்பதால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பிரச்சினைகளை தொடர்ச்சியாக ஒருவருக்கு ஒருவர் எதிரான
குற்றச்சாட்டுகளாக மாற்றினால், எதிர்காலத்தில் தமிழ் பேசும் அரசியல்
கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்
எச்சரித்தார்.
“எங்களுடைய நோக்கம் பிரச்சினைகளை மறைப்பது அல்ல. பிரச்சினைகளை
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதுதான்” என அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் உடனடியாக சுமூகமான தீர்வை வழங்க வேண்டும்
முஸ்லிம் பெண்கள் தங்களது கலாசார அம்சங்களுடன் பணியாற்றக்கூடிய வகையில்
அரசாங்கம் சுற்றுநிரூபத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டால், கல்முனை
வைத்தியசாலை சீருடை விவகாரத்திற்கு சுமூகமான தீர்வை வழங்க முடியும் என
சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
கல்முனை வைத்தியசாலையை மாத்திரம் இலக்கு வைத்து அங்கு பணியாற்றும்
மக்களையும் அதிகாரிகளையும் குற்றஞ்சாட்டும் சில அரசியல்வாதிகளின்
செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கிழக்கில் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து
வருவதாகவும், அவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை அரசியல் இலாபத்திற்காக இன
முரண்பாடுகளாக மாற்றக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
“இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி, அதிலிருந்து அரசியல் இலாபம்
தேடுவது அரசியல் அல்ல. இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன்
செயற்பட்டு, சீருடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மீளாய்வு செய்து, தேவையான
திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என சாணக்கியன் இராசமாணிக்கம்
பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அத்துடன், தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கருத்து
வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில்
ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை எவரும் சிதைக்கக் கூடாது எனவும்
அவர் கேட்டுக்கொண்டார்.




