Rebecca
Nov 19, 2025
உள்ளூர்
மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கே உள்ளது : பிரதமர் ஹரிணி அமரசூரிய
போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடல் விடுதியில் நேற்று பசுமை மாற்றத்தினுள் வகிபாகம் குறித்து ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் பசுபிக் வலய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான மாநாடு நடைபெற்றது.
இதில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
பிற்கால காலணித்துவ உரிமையாக நமக்குக் கிடைக்கப்பெற்ற கல்வியின் விளைவாக, நமது நாடு உயர்ந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட ஒரு நாடாக மாறி இருக்கின்றது.
ஆயினும், தற்போது கல்வி என்பது தனிமனித வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒன்றாக மாறி இருக்கின்றது. இதனால், கல்வித் திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியனவும் போட்டித் தன்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
இதன் விளைவாக, நமது கல்வி முறை போட்டித்தன்மை மிகுந்த, பரீட்சையை மையமாகக் கொண்டதாக மாறி இருக்கின்றது. ஆயினும் கல்வி என்பது தனிமனித வெற்றியைக் குறியாகக் கொண்ட ஒரு செயல்பாடு மாத்திரமல்ல.
தற்போது இந்தக் கட்டமைப்பிலிருந்து விலகி, கல்வி என்பது வெறுமனே உயர்ந்த புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்லாத, கூட்டு அறிவைப் பகிர்ந்து கொள்ளும், மாற்றத்திற்கான கல்வியின் உண்மையான நோக்கத்தை சரி செய்வதற்கே நாம் முயற்சிக்கிறோம்.
கல்வியின் மாற்றியமைக்கும் சக்தியை பெரும்பாலும் நாம் மறந்து விடுகிறோம். அது தனிமனித வெற்றிக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும்.

மக்களை அரசியல், சமூக-பொருளாதார ரீதியில் ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கு இருக்கின்றது. ஆகையினால், பரஸ்பர எதிர்பார்ப்பு மற்றும் பரஸ்பர வெற்றி ஆகியவற்றைக் கொண்ட ஒரு துறையாகக் கல்வியை மாற்றுவது மிகவும் அவசியமானதாகும்.
எமது புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம், ஒத்துழைப்புமிக்க கற்றல், மற்றவர்கள் மீதான பொறுப்புணர்வு, ஆகியவற்றோடு உலகத்தின் மீதான பொறுப்புணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக இன்று நாம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான உலகளாவிய போராட்டங்களின் பின்னணியில் இது மிகவும் முக்கியமானதாகும்.
இன்றைய உலகில் தலைத் தூக்கி வரும் அறிவியல் பூர்வமற்ற வழிமுறைகள் மற்றும் போலியான தகவல்கள் பரவிவரும் பின்னணியில், கல்வியின் முக்கியத்துவம் மென்மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் காணப்படும் அழுத்தங்களையும் இந்த மாற்றத்தின் மூலம் வெற்றிகொள்ள முடியும்.
இத்தகைய விவாதங்கள், பரிமாறல்கள் மற்றும் கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் ஆகியன, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்படும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கல்வியின் அவசியத்தையே நமக்கு மென்மேலும் உணர்த்துகின்றது.
நமது கல்வி முறையை போட்டி மனப்பான்மையின் சிறையிலிருந்து விடுவித்து, ஒத்துழைப்புமிக்க, பொறுப்புமிக்க பகிர்ந்து கொள்ளுதலின் சுதந்திரமான இடைவெளியாக மாற்றுவதே இலங்கையின் எதிர்காலத்திற்காக நாடு எதிர்கொள்ளும் அடிப்படைச் சவாலாகும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மெரினோ, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாளக களுவெவ மற்றும் பிராந்தியப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதி வழங்கப்படும் Erasmus+ நிகழ்ச்சி, கல்வி, பயிற்சி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பிற்கான உலகின் முன்னணி நிகழ்ச்சித்திட்டமாகும்.
நாடுகளுக்கிடையேயான நகர்வுகள், கலாசாரப் பரிமாற்றம், திறன் அபிவிருத்தி மற்றும் கொள்கை அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையின் உயர்கல்வி, தொழிற்பயிற்சி, இளைஞர் அபிவிருத்தி மற்றும் நிறுவனப் பங்காண்மைகளுக்கான ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இந்த மாநாடு நவம்பர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கொழும்பு காலி முகத்திடல் விடுதியில் நடைபெறுகிறது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








