
admin
Jun 8, 2026
விளையாட்டு
2026 உலகக் கிண்ணத்திற்கு ‘ஸ்மார்ட்’ பந்து அறிமுகம்.

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 பிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடர், புதிய தொழில்நுட்பப் புரட்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.
அதிகளவிலான நாடுகள் பங்கேற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக, 'அடிடாஸ்' (Adidas) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 'ட்ரியோண்டா' (Trionda) என்ற உத்தியோகபூர்வ போட்டிப் பந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பானிய மொழியில் 'மூன்று அலைகள்' எனப் பொருள்படும் இந்த பெயர், இந்த முறை போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், நவீன காற்பந்து விளையாட்டின் வேகத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
இந்த 'ட்ரியோண்டா' பந்தின் உட்பகுதியில் 'இனெர்ஷியல் மெசர்மென்ட் யூனிட்' (IMU) எனப்படும் அதிநவீன சென்சார் சிப் (Sensor Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் காற்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தச் சிறிய சென்சார், ஒரு வினாடிக்கு 500 முறை தரவுகளைப் பதிவுசெய்து, பந்தின் வேகம், முடுக்கம் மற்றும் முப்பரிமாண (3D) நகர்வுகளை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் பந்து செல்லும் திசையின் ஒவ்வொரு நொடி மாற்றத்தையும் நடுவர்களால் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
நடுவர்களின் முடிவுகளில் மனிதத் தவறுகளைக் குறைத்து, விளையாட்டின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்துவதே இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும் என சர்வதேச காற்பந்துச் சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நடுவர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் Offside முடிவுகள், Handball சர்ச்சைகள் மற்றும் பந்து திசைமாறும் சந்தர்ப்பங்களில், வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு இந்த சென்சார் வழங்கும் நேரடித் தரவுகள் பக்கபலமாக அமையும்.
இது குறித்து பிஃபாவின் ஆராய்ச்சி மற்றும் தரநிலைகளுக்கான தலைவர் நிக்கோலஸ் எவன்ஸ் , "முப்பரிமாண வெளியில் பந்து எந்தப் புள்ளியில், எவ்வாறு பயணிக்கிறது என்பதை இந்த சென்சார் துல்லியமாக வெளிப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியொன்றின் போது, முழுமையாக மின்னூட்டம் (Charge) செய்யப்பட்ட 15 முதல் 20 வரையிலான 'ஸ்மார்ட்' பந்துகள் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
இதில் ஒவ்வொரு பந்தும் போட்டியில் பயன்படுத்தப்படும் போது, தொடர்ந்து 6 மணித்தியாலங்கள் வரை இயங்கும் ஆற்றல் கொண்டவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





