Search

admin

Feb 2, 2026

விளையாட்டு

பாகிஸ்தானின் தீர்மானம் ஏற்புடையதல்ல - ஐ.சி.சி

எதிர்வரும் 15 ஆம் திகதி இந்திய அணியுடனான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்துள்ள தீர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை பதில் வழங்கியுள்ளது. 

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி-20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நேற்று அனுமதி வழங்கியது. 

எவ்வாறாயினும் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. 

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை பதில் வழங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

2026 ஆடவருக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் தனது தேசிய அணி தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் என பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள முடிவு குறித்த அறிக்கையை ஐசிசி கவனத்தில் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பை ஐசிசி எதிர்பார்ப்பதாகவும், தகுதி பெற்ற அனைத்து அணிகளும் போட்டி அட்டவணையின்படி சமமான நிபந்தனைகளின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற உலகளாவிய விளையாட்டின் அடிப்படை நோக்கத்தினால், இந்த தீர்மானத்துடன் உடன்பட முடியாது என குறிப்பிட்டுள்ளது. 

ஐசிசி தொடர்கள் விளையாட்டு ஒருமைப்பாடு, போட்டித்தன்மை, சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. 

இவ்வாறு ஒரு அணி தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்பது போட்டிகளின் தரத்தையும் நேர்மையையும் பாதிக்கும். 

தேசியக் கொள்கை விடயங்களில் அரசாங்கங்களின் பங்கினை ஐசிசி மதிக்கும் அதே வேளையில், இந்த முடிவு உலகளாவிய கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் நலனுக்கோ ஏற்புடையதல்ல. 

பாகிஸ்தான் உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பை இது பாதிக்கும் என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது நாட்டில் கிரிக்கெட்டின் நீண்டகால தாக்கங்களைக் கருத்தில் கொள்ளும் என நம்புவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசியின் முதன்மை நோக்கம் ஆகும். 

இது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உட்பட அதன் அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பாகும். அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கண்டறியும் என நம்புவதாகவும் ஐ.சி.சி குறிப்பிட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All