Search

puja

Aug 1, 2026

உள்ளூர்

பூஜித் - ஹேமசிறிக்கு மரண தண்டனை!

புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் நேற்று (31) இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகிய இருவர் மட்டுமே இந்தத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைவார்கள் என ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

போதிய புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் ரீதியாகப் பொறுப்பைத் தட்டிட கழித்து மனித உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணமான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை நேற்று (31) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்தது. 

அங்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான தீர்ப்பு முதலில் அறிவிக்கப்பட்டது. 

அதில் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள் பிரதிவாதியைச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகத் தீர்மானித்தனர். 

அந்தத் தீர்ப்பை அறிவித்த நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தின் தலைமை நீதிபதி பிரியந்த லியனகே, "உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும், அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கடமையைச் செய்யத் தவறியதால் 268 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 586 பேர் காயமடைந்துள்ளனர். அந்தக் காலத்தில் நாட்டின் பொலிஸ் மா அதிபராக இந்த பிரதிவாதியே இருந்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி மாலையில் அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்த பிரதிவாதிக்கு புலனாய்வு தகவலை வழங்கியிருந்தார். ஆனால் அதைத் தடுப்பதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றங்களைத் தடுப்பதற்காக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற வகையில் தனது பொறுப்பை அவர் தட்டிக்கழித்துள்ளார்" எனக் கூறி பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தெரிவித்தனர். 

சிறுபான்மைத் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவரை விடுவிப்பதாக அறிவித்தார். 

பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிக்கு தண்டனையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்களைக் கூற நீதிமன்றம் சந்தர்ப்பமளித்தது. 

"கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, நான் வேண்டுமென்றே எந்தவொரு கொலையையும் செய்யவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பாக எனக்குப் பொறுப்பு உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது தொடர்பான ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாலாபுறமிருந்தும் நான் சொல்லொணா நெருக்கடியை எதிர்கொள்கிறேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பல்வேறு வழக்குகளால் நான் இன்றுவரை துன்புறுத்தப்படுகிறேன். நாட்டின் பொலிஸ் மா அதிபராக எனக்கு இத்தகைய நிலைமையை ஏற்படுத்துவது எந்தளவுக்கு மனிதநேயமற்றது என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது கருணையும் பரிவும் காட்டுங்கள். வேண்டுமென்றே எந்தவொரு நாளிலும் எவருக்கும் அநீதியோ தீங்கோ விளைவிக்கும் கடமையை நான் செய்யவில்லை." என்றார். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள் ஹேமசிறி பெர்னாண்டோவை குற்றவாளியாகத் தீர்மானித்தனர். 

நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தின் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே தீர்ப்பை அறிவிக்கையில், "உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு துறையிடமிருந்து அப்போதைய மாநில புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அவர் அந்தத் தகவலை பிரதிவாதிக்கு அறிவித்திருந்தார். 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை 5.53 மணியளவில் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 8 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக நிலந்த ஜயவர்தனவுக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலையும் நிலந்த ஜயவர்தன உடனடியாக இந்த பிரதிவாதிக்கு வழங்கியிருந்தார். அந்தத் தகவல் கிடைத்ததும் அவர் பொலிஸ் மா அதிபருக்கு 'உங்கள் தரப்பில் செய்யக்கூடியதைச் செய்யுங்கள்' என்று மட்டுமே கூறியுள்ளார். தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை வழங்கப்பட்ட தகவல் நம்பகமானதா என்று பிரதிவாதி புலனாய்வு பணிப்பாளரிடம் கேட்டுள்ளார். 'ஆம் சர், இது நம்பகமான தகவல். அவர்களிடம் இருந்து முன்பும் இதுபோன்ற தகவல்கள் கிடைத்துள்ளன' என்று நிலந்த ஜயவர்தன பதிலளித்ததாக சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது" இத்தகைய தகவல்கள் இருந்தும் அதைத் தடுக்க பிரதிவாதி செயல்படவில்லை என்பதும், அவரது கடுமையான கடமைத் தவறுதல் இதன்மூலம் நிரூபணமாகிறது என்றும் கூறினார். 

பிரதிவாதிக்கு இந்தக் குற்றத்தைச் செய்ய மனப்பூர்வமான நோக்கம் இருந்தது என்றும் பெரும்பான்மை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். 

"இந்த பிரதிவாதி தாக்குதலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை அளித்தார். அதில் 'தாக்குவார்கள் என்று தகவல் கிடைத்தது. ஆனால் இப்படித் தாக்குவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை' எனக் கூறியிருந்தார். பிரதிவாதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது பற்றி முன்னரே தெரிந்திருந்தது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. பிரதிவாதியின் தீவிர அலட்சியத்தை மட்டுமின்றி அதற்கும் மேலான நிலையை இது காட்டுகிறது." 

ஆனால் சிறுபான்மைத் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விராஜ் வீரசூரிய, "இந்த பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் நியாயமான சந்தேகத்தை எழுப்புகின்றன" எனக் கூறி அவரை விடுவிப்பதாக அறிவித்தார். 

அதன்பின்னர் மரண தண்டனை விதிப்பதற்கு முன் பிரதிவாதிக்கு ஏதேனும் கூற உள்ளதா என நீதிமன்றம் வினவியது. 

அதற்குப் பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ, "தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே... பாதுகாப்புச் செயலாளர் என்று ஒரு பதவி இல்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவே பணியாற்றினேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பது மற்ற அமைச்சுகளின் செயலாளர்களைப் போன்றதே. சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை. அமைச்சரின் அறிவறுத்தலின் படியே நான் செயல்பட்டேன். அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருந்தார். பதில் அமைச்சராக எவரையும் அவர் நியமிக்கவில்லை. அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செயல்பாடுகள் முடங்கிவிடும். நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயல்பட்டார். நான் நியமிக்கப்பட்டதும் புலனாய்வு தகவல்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்று ஜனாதிபதியிடம் கேட்டேன். அதற்கு ஜனாதிபதி, 'புலனாய்வு தகவல்களை நிலந்த எனக்குத் தெரிவிப்பார், நீங்கள் நிர்வாக வேலைகளைக் கவனியுங்கள்' என்றார். நான் அமைச்சின் நிர்வாகக் கடமைகளை மட்டுமே செய்தேன். நான்கு ஆண்டுகளில் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் நிலந்தவே வழங்கி வந்தார். தாக்குதலுக்கு முந்தைய நாள் நிலந்தவிடமிருந்து எந்த ஆவணமும் எனக்கு வரவில்லை. இரண்டு வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே வந்தன. ஏப்ரல் 9 ஆம் திகதி நடந்த புலனாய்வு ஆய்வுக் கூட்டத்தில் நிலந்த இந்தத் தாக்குதல் பற்றி எதையும் கூறவில்லை. கூறியிருந்தால் அங்கிருந்த இராணுவ, கடற்படை புலனாய்வு பிரதானிகளுக்கும் தெரிந்திருக்கும்.எங்கள் குழுக்களில் ஒன்று கிழக்குப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார். இந்தத் தகவல் கிடைத்த ஏப்ரல் 1 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி இலங்கையில் இருந்தார். ஆனால், நிலந்த ஜயவர்தன இந்தத் தகவலை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்கலாம். அவர் அதை வேண்டுமென்றே மறைத்தார். இந்தத் தகவலை அவர் ஏழு முறை மறைக்க முயன்றார். அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரே இப்படிச் செயல்பட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில், நிலந்த ஜயவர்தன என்னை அழைத்து, நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து எனக்குத் தெரிவித்தார். இதை நம்ப முடியுமா என கேட்டேன். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிப்போம் என்று அவர் கூறினார். நிலந்த ஜயவர்தனவின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1500 புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர். இதை விசாரித்து உறுதிப்படுத்தும்படி அவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே... இராணுவத்தை வரவழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் கூட எனக்கு இல்லை. தலைமை நீதிபதி அவர்களே, நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள். 

"தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி விஜித் மலல்கொட குழுவை நியமித்தார். அந்த குழு 14 அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு எனக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி கூறினார். ஏப்ரல் 22 இல் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் நானும் பொலிஸ் மா அதிபருமே பொறுப்பு என்றும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார். அந்த முடிவின் இறுதி விளைவே இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவர் நிலந்த ஜயவர்தன, மற்றையவர் மைத்திரிபால சிறிசேன. சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பத்திலிருந்தே நிலந்த ஜயவர்தனவைப் பாதுகாத்தது. சாதாரண அறிவு கூட இல்லாத ஒருவனால் மட்டுமே இதில் மகிழ்ச்சியடைய முடியும்." 

"எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. காயம் இன்னும் ஆறவில்லை. எனக்கு 76 வயதாகிறது. சிறையிலடைத்தாலும் தேவையான சிகிச்சைகளை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தூக்கிலிடப்படுவதற்காவது நான் உயிரோடு இருக்க வேண்டுமே. வரலாறு என்றாவது ஒரு நாள் என்னை விடுவிக்கும்" எனக் கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

அதன்பின்னர் தீர்ப்பை அறிவித்த தலைமை நீதிபதி பிரியந்த லியனகே, "குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உள்ளது. இந்த பிரதிவாதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆவார். எனவே அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All