Search

puja

Aug 1, 2026

உள்ளூர்

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்... அரசின் புதிய திட்டம்!

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஐந்து மில்லியனாக உயர்த்துவதும், சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை 800,000 வரை அதிகரிப்பதும், 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்வதும் அரசாங்கத்தின் '2030 தேசிய சுற்றுலாத் தொலைநோக்கின்' பிரதான இலக்காகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜூலை 31 அன்று நடைபெற்ற இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் (SLITHM) 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

1964 ஆம் ஆண்டில் 'இலங்கை ஹோட்டல் பாடசாலை' என ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிபுணர்களை இத்துறைக்கு வழங்குவதற்குச் செயற்பாட்டு ரீதியிலான பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது. பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் விருதுகளையும் பிரதமர் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர், 'டிட்வா' சூறாவளி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை பாராட்டுக்குரிய வகையில் மீண்டெழுந்துள்ளதாகவும், தற்போது சுற்றுலாத்துறையானது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரதான சக்தியாக மாறியிருப்பதோடு, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம் சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளதுடன், இத்துறையின் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 429,000 ஐக் கடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தொழில்நுட்ப அறிவைப் போலவே, சுற்றுச்சூழல் பற்றிய பொறுப்புணர்வு, தொழில்முறை கௌரவம், மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிற்துறையாளர்கள் இத்துறைக்குத் தேவைப்படுகின்றனர் என்பதையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு SLITHM நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய பிரதமர், பாதுகாப்பான பணிச்சூழலுக்குள் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சுற்றுலாப் பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, சுற்றுலா அமைச்சின் செயலாளர் தீர ஹெட்டிஆரச்சி, SLITHM தலைவர் வசந்த மந்திரீபால உள்ளிட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், இராஜதந்திரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All