சட்டமன்ற நேரம் தனிமனித தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது – CPM கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையில், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை இலக்காகக் கொண்டு குற்றச்சாட்டுகள் மட்டுமே அவரின் உரையில் நிரம்பியிருந்ததாக அவர் தனது எக்ஸ் (X) பதிவில் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பிடியில் ஜனநாயக அமைப்புகள் உள்ள நிலையில், அமுலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல என்று அவர் வாதிட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பினராயி விஜயன் விவகாரங்களை இதற்கு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், ஏழை, எளிய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தாமல், தனிமனித தாக்குதல்களுக்கும் தலைவர்களைப் பாராட்டுவதற்கும் பயன்படுத்துவது முற்றிலும் அறமற்ற செயலாகும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்த அவர், யாராக இருந்தாலும் உருவக்கேலி செய்து பேசுவது கண்டனத்திற்குரியது என்றும், அதை முதலமைச்சர் விஜய் செய்திருப்பது பொறுப்பற்ற செயல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.




