2026 October 18, Sunday 🌧️ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புகையிலை விற்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறை எச்சரிக்கை!

உள்ளூர்July 17, 2026 · 3 months முன்8
புகையிலை விற்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறை எச்சரிக்கை!

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 

இதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது அட்டவணையின்படி, நாட்டில் புகையற்ற புகையிலைத் தயாரிப்புகளை விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என உபுல் ரோஹண வலியுறுத்தினார். 

எவ்வாறாயினும், இது வெற்றிலைப்பாக்கு விற்பனையாளர்களை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டம் அல்ல என்றும், இந்நாட்டு மக்களை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் என்றும் அவர் கூறினார். 

இந்நாட்டில் வருடாந்தம் 1,750 க்கும் 1,900 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகின்றனர். 

இதன் காரணமாக, இந்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி மக்களை அந்த நோய் நிலைமையிலிருந்து பாதுகாப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இதற்கமைய, எதிர்காலத்தில் வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது. 

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால், 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபில் ரோஹண எச்சரித்துள்ளார். 

நாட்டில் நிலவும் கலாசாரக் காரணிகள் காரணமாக, குறித்த சட்டத்தின் கீழ் இதுவரை நேரடியாகச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்றும், விழிப்புணர்வு மாத்திரமே ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

பொதுமக்கள் தங்களைத் திருத்திக்கொள்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என உபுல் ரோஹண தெரிவித்தார்.