jino
Aug 13, 2025
உள்ளூர்
மன்னார் காற்றாலை குறித்து ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்க வேண்டும் - 11 நாட்களாக தொடரும் போராட்டம்..
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2 வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதிக்கும்,மன்னாரில் இருந்து சென்ற குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம் பெற உள்ள நிலையில், குறித்த பிரச்சனைக்கு உரிய தீர்வு
கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்றைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, எதிர்ப்பு ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் 11 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக சிறுத்தோப்பு மற்றும் அதனை அண்டிய கிராம மக்களும் வருகை தந்து ஆதரவு வழங்கி உள்ளனர்.மேலும் யாழ் மறைமாவட்ட குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரும் வருகை தந்து ஆதரவு வழங்கியுள்ளனர்.
குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள்,சிறுவர்கள்,கர்ப்பினித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

மன்னார் காற்றாலை அமைப்பு விவகாரம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறி தற்போது மாறியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்று(13) பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வை சந்தித்து பேச உள்ளனர்.
மேலும், போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் ஐந்து பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், பிரதேச செயலாளர் போன்றோர் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியுள்ளனர்.
குறித்த பேச்சு வார்த்தையின் போது போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், தமக்கு சாதகமான பதில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மன்னாருக்கு பிரசாரத்துக்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் அந்தப் பிரதேச மக்களின் அனுமதியும் இணக்கமும் இல்லாமல் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப் படமாட்டாது. என்று வாக்குறுதி அளித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All