jino
Aug 20, 2025
உள்ளூர்
ஜனநாயக அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் - இரா.சாணக்கியன்.
நாட்டில் வடக்கு - கிழக்கு மக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
எம்மை இனவாதியாக சித்தரிக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர், ஜனநாயக அடிப்படையில் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
- நேற்றைய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹர்த்தால் பற்றி கடையடைப்பிற்கு ஆதரவு வழங்கியவர்களும், ஆதரவு வழங்காதவர்களும் பல்வேறு விடயங்களைக் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கைத் தமிழரசு கட்சியால் கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் உட்படப் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். முல்லைத்தீவு இளைஞரின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம். இந்த விடயம் சமூகவலைத்தளங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் ஹர்த்தால் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைப் பேச்சாளர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் கலந்துகொண்டார்கள். இதனைத் தொடர்ந்தே ஹர்த்தாலை நண்பகல் வரை வரையறுக்கத் தீர்மானித்தோம். உயிரிழந்த இளைஞருக்கும், இராணுவத்தினருக்கும் தொடர்புள்ளது. அதனடிப்படையில் இராணுவப் படையினர் ஒருசிலர் கைது செய்யப்பட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அனைத்து இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும்.

இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.
இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கும், பொலிஸாரின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இராணுவ முகாமுக்குள் வந்த ஒரு இளைஞரை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். முகாமுக்குள் அத்துமீறிய வகையில் இவர்கள் சென்றிருந்தால் அவர்களைக் கைது செய்து பொலிஸில் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் தெளிவான சிக்கல் காணப்படுகின்றது.
ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றோம். நாங்கள் ஜனநாயகக் கொள்கைக்கு அமைவாகவே செயற்படுகின்றோம். எமது பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வையே எதிர்பார்க்கின்றோம் என்றார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All