jino

Aug 18, 2025

உள்ளூர்

மனிதப் புதைக்குழிகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் - வடக்கு - கிழக்கில் கையெழுத்து போராட்டம்.

வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும். என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கோரி தமிழ் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் வருடக்கணக்கில் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த அரசும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கவில்லை. மேலும் செம்மணி மனிதப் புதைக்குழி போன்றவற்றில் சிறுவர்கள், பெண்கள்,குழந்தைகள் என உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனாலும், இந்த மனித புதைகுழிகள் தொடர்பில் உள்நாட்டில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும், குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனையும் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் தமிழ் மக்கள் இந்த விடயங்களில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருகின்றனர்.

மனித புதைகுழிகள் தொடர்பான நவீன தொழில்நுட்ப உதவிகள் உட்பட சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ற தமிழ் மக்களின் இக்கோரிக்கையினை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ளது என்றார்.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp