MuSHArraf
Aug 20, 2025
உள்ளூர்
இலங்கை ராணுவ முகாமில் தமிழ் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன ?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான ராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு எதிராகவும், முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிராகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தவிர்த்த ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றியளித்ததாக அதை முன்னெடுத்த இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. என்ன நடந்தது? மக்கள் இந்த ஹர்த்தாலை எப்படி பார்க்கின்றனர்?
முல்லைத்தீவு - முத்தையன்கட்டுக் குளத்தில் ஒரு ஆண் சடலம் கடந்த 9ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அந்த பகுதியிலுள்ள ராணுவ முகாமொன்றுக்குள் ராணுவத்தினால் வரவழைக்கப்பட்டதாக தமிழ் தரப்பினர் கூறும் ஐந்து நபர்களில் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.
ராணுவ முகாமில் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் இரும்பு பொருட்களை பெற்றுத் தருவதாக ராணுவ அதிகாரிகள் கூறியே, இந்த இளைஞர்கள் அங்கு சென்றதாக தமிழ் தரப்பினர் கூறுகின்றனர். அதன் பின்னர், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதையடுத்து, மூன்று ராணுவ சிப்பாய்களை ஒட்டுச்சுட்டான் போலீஸ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசு கட்சி திங்கட்கிழமை ஹர்த்தால் அறிவித்தது. எனினும், யாழ்ப்பாணம் நகரம் அன்று வழக்கம் போல இயங்கியதை அங்கு சென்ற பிபிசி குழுவால் அவதானிக்க முடிந்தது. பெரும்பாலான பகுதிகளில் பொது போக்குவரத்து, பள்ளிகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவை வழமை போல இயங்கின. அதே நேரம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை முற்பகல் வேளையில் பாதிக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
ஹர்த்தால் விஷயத்தில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், அதனால் கடையடைப்பு செய்யவில்லை என்கிறார் யாழ்ப்பாணத்தில் தையல் நிலையம் நடத்திவரும் ரவிச்சந்திரன்.
இந்த ஹர்த்தால் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனஞ்சன் கூறுகிறார்.
ஆனால், இந்த ஹர்த்தால் வெற்றியடைந்ததாக கூறுகிறார் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்.
இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கமளித்த ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, ராணுவத்தின் முகாமிற்குள் இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சிலர் பிரவேசித்ததாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறினார்.
மேலும், சட்டவிரோதமாக ராணுவ முகாமிற்குள் பிரவேசித்த ஒருவரை தமது தரப்பினர் பிடித்துக் கொண்டதாகவும், ராணுவத்தினால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்
அந்த நபர் மீது ஏற்கனவே ராணுவ முகாமிற்குள் பிரவேசித்து திருட்டு சம்பவமொன்றில் ஈடுபட்டமை குறித்த வழக்கொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கூறினார்.
அதே போல, இந்த மூன்று சிப்பாய்கள் கைது செய்யப்பட்டதற்கு ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் உயிரிழந்த விவகாரம் காரணமல்ல என்றும் பிரிகேடியர் வருண கமகே கூறினார்.
இது தொடர்பாக விளக்கமளித்த அவர், ராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை திருட உதவி வழங்கிய அடிப்படையிலே 2 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் மேலும் ஒரு சிப்பாய் தப்பிச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All