MuSHArraf
Aug 23, 2025
உள்ளூர்
செம்மணியில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : ரிஷாட் வலியுறுத்தல்
செம்மணியில் இடம்பெற்றது பாரிய அநியாயமாகும். அதனை யார் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக சிவஞானம் சிறீதரன் நேற்று (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ”இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நாடு என்பதை சிறீரன் (Shritharan) எம்.பி உள்ளிட்ட அனைவரும் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்து இன மக்களும் இணைந்து போராடியே இந்த நாட்டுக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொண்டார்கள். அதனை மறந்து வாழமுடியாது. பிற்காலத்தில் பெரும்பான்மை இன தலைவர்களின் தவறினால், நாட்டில் ஆயுத போராட்டம் ஒன்று ஏற்பட்டது.
முஸ்லிம் சமூகம் ஒருபோதும் இந்த நாட்டை பிரித்து வழங்குமாறு கேட்டதில்லை. அதற்காக போராடவும் இல்லை. ஆனால் யுத்தத்தினால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டது.
காத்தான்குடியில் பள்ளிவாசலில் அப்பாவி மக்கள் சுடப்பட்டார்கள். ஹஜ் கடமையை செய்துவிட்டு திரும்பிய மக்களின் ஜனாஸாக்கள் எங்கே அடக்கப்பட்டுள்ளார்கள் என தெரியாமல் குடும்பங்கள் இன்றும் கவலையுடன் இருக்கிறார்கள்.
அதேபோன்று செம்மணியில் இடம்பெற்ற அநியாயங்களும் பாரிய அநியாயமாகும். யார் செய்தாலும் அதற்கு தண்டனை காெடுக்க வேண்டும். அதனால் அனைவரும் இது எமது நாடு என சிந்தித்து செயற்பட்டால், எங்களுக்கு பின்னால் வரும் எமது பிள்ளைகள் இங்கு ஒற்றுமையாக வாழ்வார்கள்.
அத்துடன் அண்மையில் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலின் நோக்கம், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், அங்கிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதாகும்.
இந்த கோரிக்கைக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். எப்படி ஆதரவு வழங்க முடியும். ஹர்த்தாலை முன்னெடுப்பதாக இருந்தால், மற்றவர்களின் ஆதரவு தேவை என்றிருந்தால், அனைவரையும் கூட்டி கலந்துரையாடி இருக்க வேண்டும்.
இதுதொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டு, நடவடிக்கை எடுக்க தவறி இருந்தால், எல்லோரும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்திருக்கலாம். அவ்வாறு இல்லாமல் இவ்வாறு செயற்படுவதால், நாடு தொடர்ந்தும் பாதிக்கப்படும்.
முதலீட்டார்கள் நாட்டுக்கு வரமாட்டார்கள். கடந்த 70 வருடங்களாக இதுவே இடம்பெறுகிறது. தேசிய மக்கள் சக்திக்கு தற்போது மக்கள் ஆணை ஒன்றை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டை ஆட்சி செய்ய நாங்கள் சற்று இடமளிப்போம். அவர்கள் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டுவோம்.
அவ்வாறு இல்லாமல் அவர்களின் ஆட்சியை குழப்பி, நாட்டை சீரழிக்க நினைக்கும் கட்சியல்ல எமது கட்சி. இந்த நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெற்றது என்றால், அது கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) காலத்திலாகும்.

முஸ்லிம்களின் சடலங்களை பலவந்தமாக எரித்தார். பலரும் தடுத்தும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.100 வருடகாலமாக செயற்பட்டுவந்த மஹர பள்ளிவாசலை மூடினார். ஈஸ்டர் தாக்குதலுக்கும் பள்ளிவாசல் மூடப்படுவதற்கும் என்ன சம்பந்தம்? குண்டு தாக்குதலுக்கு பிறகுதான், அந்த பள்ளிவாசல், சிறைச்சாவைக்கு அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது.
அதிகாரிகள் சொல்வதை கேட்டுக்கொண்டு செயற்படக்கூடாது. அதனால் 70 வீத முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதனால் மஹர பள்ளிவாசல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தில் இருக்கும் சில அதிகாரிகளின் நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு எதிராக இருக்கிறது. அதனால் அரசாங்கம் அந்த அதிகாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது அரசாங்கத்துக்கே பாதிப்பாக அமையும்.
முஸ்லிம்களுக்கு இன்னும் பாதிப்பு இடம்பெறுகிறது. அண்மையில் கல்வி மறுசீரமைப்பு தொடல்பில் கல்வி அமைச்சினால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் ஒரு முஸ்லிம்கூட நியமிக்கப்படவில்லை. இது முறையல்ல” என தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All