jino

Aug 17, 2025

உள்ளூர்

ஜனாதிபதியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள் - சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் நோக்கமா?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரச உயர்மட்டத்தினரின் பல வெளிநாட்டு விஜயங்கள் வரவிருக்கும் செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளன.

அமெரிக்கா, ஜப்பான், ஜெனீவா என அடுத்தடுத்து அமையவுள்ள இந்த விஜயங்கள் நாட்டின் எதிர்கால வெளிநாட்டு உறவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கருதப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செப்டம்பர் 23 திகதி நியூயோர்க் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில், கலந்து கொண்டு இலங்கையின் சார்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செப்டம்பர் 24 உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் அவ் உரையில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை, காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஒத்துழைப்பு, நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல உலக தலைவர்களுடனான இருதரப்பு சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

நியூயோர்க் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஜனாதிபதி 'ஜப்பான் – எக்ஸ்போ 2025' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் செல்லவுள்ளார். செப்டம்பர் 27ஆம் திகதி ஓசாக்காவில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பிற்கமையவே ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தில் பொருளாதாரம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டெம்பர் 8ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் 60ஆவது அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார்.

அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்து மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

இவ்வமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.

அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளன.

அதற்கமைய ஏனைய நாட்டு அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இரு தரப்பு சந்திப்புக்களிலும் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே எதிர்வருகின்ற செம்டம்பர் மாதத்தில் ஜனாதிபதி மற்றும் அரசாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களானது நாடளாவிய ரீதியிலும், உலகளாவிய ரீதியிலும் கவனம் பெற்று வருகின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp