SEGU
Aug 16, 2025
அரசியல்
என்.பி.பி. அரசுக்குள் பிளவா? கைகூடுமா எதிரணிகளின் கூட்டு " ஒப்பரேஷன்"!
ஒற்றுமையே பலம் பொருந்திய ஆயுதமாகும். எத்தகைய சவால் வரினும் அவ்வாயுதம்மூலம் அத்தனை சவால்களையும் எதிர்கொள்ள முடியும். ஒரு நாட்டில், வீட்டில், அணியில் ஒற்றுமை இருக்குமானால் பிரச்சினைகள், குழப்பங்கள் படையெடுத்துவரப்போவதில்லை. அவ்வாறு வந்தாலும் அவை நீடித்து நிலைக்கப்போவதில்லை. ஒற்றுமை சீர்குலையும் பட்சத்திலேயே அழிவின் - பிரிவின் - பிளவின் துவக்க புள்ளியும் ஆரம்பமாகின்றது எனலாம்.
முடியாட்சியின்போது உள்ளக ஒற்றுமை சீர்குலைந்ததாலேயே முக்கிய சாம்ராஜ்ஜங்கள்கூட சரிந்துள்ளன. இதனால்தான் படையெடுக்க தயாராகும் தரப்பு, எதிரி நாட்டில் ஏதேனும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையை முதலில் சீர்குலைக்க முற்படும். இதற்காக சதி, சூழ்ச்சி, விலை கொடுப்பு, வலை விரிப்பு, பாலியல் என அத்தனை அம்சங்களும் ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடும்.
சில மத்திய கிழக்கு நாடுகளில் அரபு வசந்தம் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அந்நாடுகளில் உள்ளக கட்டமைப்பில் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டது. அதனால்தான் எளிதில் ஆட்சிகளை கவிழ்க்க முடிந்தது என்பது கசப்பான உண்மையாகும்.
சில விடுதலைப் போராட்டங்கள்கூட உள்ளக கட்டமைப்பில் ஒற்றுமை சீர்குலைந்து காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, காலை வாருதல் போன்ற துரோக அம்சங்கள் அரங்கேறியதால்தான் தோல்வியில் முடிந்தன.
அட எதற்காக ஒற்றுமை பற்றி தற்போது சனத் தற்போது புராணம் பாடுகிறார் என யோசிக்கின்றீர்களா? வாருங்கள் விடயத்துக்குள் செல்வோம்.
இலங்கை குடியாட்சியாகும். ஜனநாயக முறைப்படியே ஆட்சி மாற்றங்கள் இடம்பெற வேண்டும். யார் தம்மை ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தார்மீக உரிமை மக்களுக்கே உள்ளது. எனவே, மக்கள் ஆதரவை தம் வசப்படுத்திக்கொள்வதற்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதற்குரிய ஜனநாயக உரிமை கட்சிகளுக்கு உள்ளது. எனினும், அரசியல் என்ற போர்வையில் வதந்திகளுக்கு உயிர் கொடுத்து, அதன்மூலம் மாற்றத்தை செய்ய முற்படுவது ஜனநாயக அரசியலா என்றால், இல்லை என்பதே ஜனநாயக விரும்பிகளின் பதிலாகும். சூழ்ச்சி அரசியலின் ஓர் அங்கமாகவே அது கருதப்படும்.
ஜே.வி.பி - தேசிய மக்கள் சக்திக்குள் நீடித்த ஒற்றுமைதான்தான் அக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு வழிசமைத்த பிரதான காரணங்களுள் ஒன்று எனலாம். மத்திய குழு - நிறைவேற்றுக்குழு முடிவை எடுத்துவிட்டால் எவ்வளவு பெரிய தலையாக இருந்தாலும் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டே செயற்படுவார்கள்.
அறகலயவால் கோட்டாபய ராஜபக்ச பதவி துறந்த பின்னர் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்குரிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தபோது தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பிக்கள் சபையில் இருந்தனர். அநுர போட்டியிட்டார். அநுரவுக்கு மூன்று வாக்குகள் விழுந்தன. இரகசிய வாக்கெடுப்பு நடந்தபோதிலும்கூட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் டளசுக்கு உறுதியளித்த பலரும் கடைசிநேரத்தில் காலை வாரி, ரணிலை ஆதரித்திருந்தனர். என்.பி.பியின் எண்ணிக்கை அன்று மூன்று என்ற போதிலும் அவர்களுக்கிடையில் இருந்த ஒற்றுமையின் தரம் அதிகம்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு வலுவாக பயணித்துக்கொண்டிருக்கின்றது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் ஊழல், மோசடிகளில் ஈடுபடுவதில்லை. அவர்களின் நிர்வாக நடத்தையில் குறை காண்பதற்கு எதுவும் இல்லை. இதனால்தான் ஜனாதிபதி அணியும் சட்டை, பிரதமரின் 'எயார் ஸ்டைல்" என்பன பற்றி பேசும் நிலை எதிரணிகளுக்கு ஏற்பட்டுள்ளன.
மறுபுறத்தில் ஒற்றுமையாக இருக்கும் தேசிய மக்கள் சக்திக்குள் ஒற்றுமையை சிதைப்பதற்காக கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எதிரணிகளால் வசந்திகள் பரப்பட்டுவருகின்றன.நான் முன்னர் கூறியதுபோல ஒற்றுமையை சிதைத்தால்தான் அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்க முடியும் என்பதற்காக ஜனநாயகத்துக்கு அப்பால் சூழ்ச்சி அரசியல் செய்யப்படுகின்றது என்பது வெளிப்படையாக தெரிவிகின்றது. இந்த சூழ்ச்சி குறித்து தனது நாடாளுமன்ற உரையில் ஜனாதிபதி தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பியினர் பதவிகளுக்காக குடுமிச்சண்டையில் ஈடுபடுவதில்லை. அவர்களின் உயரிய அரசியல் கொள்கைகளால்தான் கற்ற சமூகம் தேசிய மக்கள் சக்தியாக அவர்களுடன் சங்கமித்தனர். பதவிதான் முக்கியம் எனில் பிரதி நிதி அமைச்சர் பதவியை துறந்துவிட்டு, நிதி அமைச்சின் செயலர் பதவியை சூரியப்பெரும ஏற்றிருப்பாரா? பிரதமர் விரிவுரையாளர்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்கூட சேவையாற்றியுள்ளார். பல லட்சங்களை இழந்துவிட்டுதான் நாட்டுக்காக அவர் செயற்படுகின்றார். அவருக்கு பதவி, பணம்தான் முக்கியமெனில் பல்கலைக்கழக விரிவுரையாளராகவே இருந்தால்போதும். நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகத்தை போற்றாவிட்டால்கூட பரவாயில்லை, கீழ்த்தரமான விமர்சிக்காமல் இருந்தால்போதும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
தற்போது வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் விஜித ஹேரத்தை அப்பதவியை துறந்துவிட்டு, ஜே.வி.பியின் செயலர் பதவியை ஏற்குமாறு கட்சி கோரினால் எவ்வித தயக்கமும் இன்றி அவர் அதனை செய்வார். அந்தளவுக்கு கட்டுக்கோப்பான அரசியல் இயக்கம்தான் ஜே.வி.பி., ஆக அதிகார ஆசை, பதவி மோகம் என்பவற்றால் என்.பி.பி. ஐ உடைக்கலாம் என வியூகம் வகுத்தால் அது நிச்சயம் மண் கவ்வும் என்பது வெள்ளிடைமலை.
மஹிந்த, மைத்திரி, ரணில் ஆட்சிகளின்போது ஆளுங்கட்சியில் பின்வரிசை எம்.பிக்கள் புரட்சி, அரசாங்கத்துக்குள் குழப்பம், கட்சி தாவல்கள் என்றெல்லாம் அன்று செய்திகளை எழுதிய சிலருக்கு, இன்றும் அப்படி நடக்காத நிலையில், கற்பனை அடிப்படையிலேனும் எழுதி மகிழ்கின்றனர். ஆனால் அதனை செய்தியாக எழுதாமல் கற்பனை கதைகளாக எழுதினால் - கதையாகவேனும் வாசித்து வாசகர்கள் மகிழலாம் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
நாரதர் கலகம் நன்மையிலேயே முடியும் என்பார்கள், அதற்காக எதிரணியை நாரதர் எனக் கூறவில்லை. இருந்தாலும் 'அரசாங்கத்துக்குள் குழப்பம்" என அவர்கள் ஏற்படுத்திய கலகம் என்.பி.பி. அரசுக்கு நன்மையிலேயே முடியவுள்ளது. தேசிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. எதிரணிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் அரசாங்கத்தின் ஒற்றுமை வெளிபடும்.
ஆர்.சனத்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All