
admin
Apr 13, 2026
உலகம்
ஈரான் மீதான கடல் வழித் தடையை அமுல்படுத்துகிறது அமெரிக்கா

ஈரானின் அனைத்துத் துறைமுகங்களுக்குமான கடல் வழிப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தும் 'முற்றுகை' (Blockade) நடவடிக்கையை இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான உடன்பாடின்றி நிறைவடைந்ததையடுத்து, ஈரான் மீதான இந்த கடும் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அமெரிக்க நேரப்படி இன்று (13) காலை 10 மணி முதல் (இலங்கை நேரப்படி இரவு 7.30 அளவில்) இந்த முற்றுகை அமுலுக்கு வருகிறது.
ஈரானின் அனைத்துத் துறைமுகங்கள், அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்துக் கப்பல்களுக்கும் இந்தத் தடைக்கு உட்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நாட்டின் கப்பலாக இருந்தாலும், ஈரானியத் துறைமுகங்களுடன் தொடர்புகளைப் பேண முற்பட்டால் அவை பாரபட்சமின்றித் தடுத்து நிறுத்தப்படும் என மத்திய கட்டளைப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவதன் மூலம் ஈரானின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முடக்குவதே அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச சந்தைகளில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





