Rebecca
Sep 7, 2025
உள்ளூர்
அரிய வகை முழு சந்திரகிரகணம் இன்று
வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் இன்றைய தினம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.
7 ஆண்டுகளின் பின் தோன்றும் குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77 சதவீதம் பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தெளிவாக அவதானிக்க முடியும்.
இன்றைய தினம் இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்.
அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு,
கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7)
பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57
முழுமையான கிரகணம் - இரவு 11:01
அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42
கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8)
பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26
கிரகணம் முடிவு - அதிகாலை 2:25
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All