SEGU
Sep 10, 2025
உள்ளூர்
மலையக அதிகார சபை மூட படாது: தமுகூ தலைவர் மனோ கணேசனிடம், அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதி
“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் நேரடியாக உறுதி அளித்துள்ளார்.
இது பற்றி தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியதாவது;
“மலையக அதிகார சபை என அறியப்படும் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மூடி விட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம்’ என துறை சார் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, இன்று பாராளுமன்றத்தில் என்னிடம் தனிப்பட்ட உறுதி மொழியை அளித்தார்.
கல்வி, காணி, வீடு, சுகாதாரம், சமூக மேம்பாடு, வருமான-வேதன தேவைபாடு, வறுமை ஒழிப்பு ஆகிய பல்வேறு துறைகளில் பின் தங்கியுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள் வளர்சி அடைய வேண்டுமானால், இந்த பல்வேறு துறை சார் அமைச்சுகளின் பணிகள் கூட்டி இணைக்க பட வேண்டும். இந்த நோக்கத்தில் மலையக மக்களின் விசேட குறைதீர் (Affirmative Policy) கொள்கை தேவையை அடிப்படையாக கொண்டு, எமது நல்லாட்சியின் போது கொண்டு வரப்பட்ட, 2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் உருவாக்க பட்ட நிறுவனமே, மலையக அதிகார சபை ஆகும்.
ஒரே பணியை செய்யும் ஒன்றுக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களை மூடி விட, இன்றைய அரசு, பிரதமர் தலைமையில் அமைத்த குழு முடிவு செய்து, அது அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இப்படி அடையாளம் காண பட்ட 33 அரச நிறுவனங்கள் மத்தியில், மலையக அதிகார சபையும் ஒன்றாக கணிக்க பட்டுள்ளது. இந்த சபையையும் மூடி விட்டு, அதன் பணிகளை ஒரு அமைச்சின் பிரிவு ஒன்றுக்கு வழங்க முடிவு எடுக்க பட்டுள்ளது. இது ஒரு தவறான புரிதல் ஆகும்.
இந்நிலையில் நாம் எமது எதிர்ப்பை பல மட்டங்களில் வெளியிட்டு இருந்தோம். ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவுக்கு இது தொடர்பில் நான் எனது ஆட்சேபனை கடிதத்தை அனுப்பி இருந்தேன். இந்த பின்னணியில் துறை சார் அமைச்சர், மலையக அதிகார சபையை மூடி விட மாட்டோம் எனக்கு தனிப்பட்ட முறையில் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பில் ஒரு அமைச்சரவை குறிப்பு (Cabinet Note) ஒன்றை சமர்பித்து முந்தைய அமைச்சரவை முடிவை, துறை சார் அமைச்சர் வாபஸ் வாங்க வேண்டும். இதை இந்த அமைச்சர் செய்வார் என நினைக்கிறேன்.
இது எமக்கு கிடைத்துள்ள ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதி வெற்றி ஆகும். அதிகாரபூர்வமான அமைச்சரவை முடிவு வரும்வரை நாம் அமைதியாக இந்த விடயத்தை அவதானிப்போம்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All