Search

Rebecca

Feb 28, 2026

உள்ளூர்

50 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு - முன்னாள் புலனாய்வு அதிகாரி கைது!

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று (27) கைது செய்யப்பட்ட நால்வரில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த போதைப்பொருள் கடத்தல் வெளிநாட்டில் உள்ள கடத்தல்காரர் ஒருவரால் வழிநடத்தப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (27) மாலை பலப்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது, அங்கிருந்த பெண்ணொருவரிடமிருந்து 6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 7 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அப்பெண்ணிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்த 30 தோட்டாக்களும், 3.8 ரகத்தைச் சேர்ந்த 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த பெண்ணிடமிருந்து அந்தப் போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல வந்த மற்றொரு நபரிடமிருந்து தலா 6 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கைப்பற்ற பொலிஸாரால் முடிந்தது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், கைது செய்யப்பட்ட இந்த நால்வர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையுடன், இவ்வருடத்தில் இதுவரை தென் மாகாணத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு 100 கிலோகிராமையும் தாண்டியுள்ளதாக கித்சிறி ஜயலத் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடம் தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் மூலம் 1,705 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களும், 432 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கித்சிறி ஜயலத், போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All