Search

puja

Jul 28, 2026

உள்ளூர்

நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு இல்லை... ஆனால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது எல் நினோ (El Niño) காலநிலை நிலவியபோதிலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எவ்வித ஆயத்தமும் இல்லை என்றும், எதிர்காலச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அத்தகைய நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பிரதான நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத் திணைக்களம் அல்லது மகாவலி அதிகாரசபை இதுவரை நீரைக் பெற்றுக்கொள்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்பதால், சபை தனது அதிகபட்ச நீர் உற்பத்தித் திறனை அதே மட்டத்தில் பேணி வருவதாக அதன் தலைவர் சந்தன பண்டார சுட்டிக்காட்டுகிறார். 

இருப்பினும், எதிர்காலத்தில் நீர்மட்டம் மிகவும் குறைந்த மட்டத்திற்குச் சரிந்து, நீர்ப்பாசனத் திணைக்களம் அல்லது மகாவலி அதிகாரசபைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிட்டால் மட்டுமே, அந்த நேரத்தில் ஏற்படும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகளின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் தற்போது வறட்சியான காலநிலை ஏற்பட்டு வருகின்றது. 

அந்தக் கணிப்புகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே மீண்டும் மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், 2027ஆம் ஆண்டின் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த நிலைமை மேலும் தீவிரமாக உணரப்படலாம் என முன்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தன பண்டார சுட்டிக்காட்டுகிறார். 

மேலும், இந்தக் காலநிலையை எதிர்கொள்வதற்காக நீர் வழங்கல் சபை தற்போது விசேட முன்ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், நிலத்தடி நீரைக் கூடுதலாகப் பெற்றுக்கொள்வதற்காகத் தற்போதுள்ள குழாய் கிணற்று அமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் கடினமான காலப்பகுதியைக் கடக்கும் வரை நீரை வீணாக்குவதைத் தவிர்த்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறும், அதிகபட்ச சிக்கனத்துடன் நீரை நுகருமாறும் சந்தன பண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All