Search

admin

Jan 25, 2026

உள்ளூர்

அரசாங்கம் தமது ஹட்டன் பிரகடனத்தை மீளவும் வாசிப்பது அவசியம் - திலகர்

இலங்கையில் மலையகத் தமிழர்களை இன்னமும் முழுமையான பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பல தேசிய கொள்கைப் பத்திரங்கள் உறுதி செய்கின்றன. 

அதேபோல பெருந்தோட்டங்களை இன்னும் இருபது வருடங்களில் இல்லாமல் ஆக்கிவிட தெளிவான கொள்கை வரைபை இலங்கை அரசு கொண்டுள்ளது. 

மலையக அரசியல் பக்கத்தின் தொடர் செயற்பாடுகள் யார் ஜனாதிபதியானாலும் மலையக மக்களின் காணி, வீடு, புதிய கிராம உரிமைகள் வென்றெடுப்பதற்கான அரசியல் அழுத்தத்தை வழங்கியே உள்ளன. 

இந்தப் பின்னணியில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் போன்ற கொள்கைப் பரப்புரையாளர்கள் மலையகத் தமிழர்களை இலங்கையின் முழுமையான பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளும் வகையிலான கொள்கை வரைபை சமூகத் தரப்பினருடன் இணைந்து தயாரித்து அதனை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். 

அதேபோல நடப்பு அரசாங்கம் அவர்களது ஹட்டன் பிரகடனத்தை மீளவும் வாசித்துக் கொள்வது அவசியம் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார். 

டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னர் மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' எனும் தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடாத்தியது. 

அரசியல்வாதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ராஜதந்திரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த இந்த கலந்துரையாடலில் பங்குபற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே திலகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

டித்வா புயலனர்த்தத்தின் பின்னர் மீட்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளின்போது மலையகத் தமிழ் மக்கள் அரசாங்க நிவாரணங்களைப் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். 

இதற்கு பல்வேறு உடனடிக் காரணங்கள் இருந்ந போதும் கூட இந்த மக்களை இலங்கையர்களாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கமே பிரதானமானதாகும். 

2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கான ஆரம்ப சுகதார வசதிகளை வழங்கும் தேசிய கொள்கைப் பத்திரத்தில் கூட இந்த மக்களை குடியேற்றத் தொழிலாளர்களாகவே குறிப்பிட்டுள்ளனர். 

தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கையில் 2050 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்டங்களை முற்றாக இல்லாமலாக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப்பின்னணியிலேயே மலையகத் தமிழர் இன்றும் காணி உரிமை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். 

மலையக மக்களின் கடந்த கால அரசியல் நகர்வுகள் பல காணி, வீடு, புதிய கிராமங்கள் எனும் கோரிக்கைகளை தேசிய மட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. 

அதனால்தான் கடந்த ஜனாதிபித் தேர்தலில் வெற்றிபெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பிரதான வேட்பாளர்களால் மூவரும் தனியான முன்மொழிவுகளை மலையக மக்கள் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதனை அநுரகுமார திசாநாயக்க, ஹட்டன் பிரகடனமாகவும், சஜித் பிரேமதாச மலையக விஞ்ஞாபனமாகவும், ரணில் விக்கிரமசிங்க அரச வர்த்தமானி ஊடாக மலையக சாசனமாகவும் உறுதி செய்துள்ளனர். 

இலங்கையின் ஏனைய எந்த இன மக்களுக்காகவும் இப்படியான தனியான முன்மொழிவுகள் ஏதும் செய்யப்படவில்லை. மலையகத் தமிழர் நோக்கி இவ்வாறு தனியான முன்மொழிவு வெளியிடக் காரணம் அதற்கான தேவை இருப்பதனாலாகும். 

எனவே யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவர்களது உறுதி மொழியை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். 

கடந்த ஜனாதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்க தமது தேசிய மக்கள் சக்தியினால் ஹட்டன் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு பொறுப்புடையவராகும். 

ஆனால் அந்த பிரகடனததையே இப்போது அவர் மறந்து விட்ட நிலையே காணப்படுகிறது. எனவே அரசாங்கம் தமது ஹட்டன் பிரகடனத்தை மீளவும் வாசித்து நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All