
puja
Jul 24, 2026
உள்ளூர்
விளையாட்டுத் துறைக்கு புதிய பாதை! ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய திட்டம்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விளையாட்டை வெறும் போட்டிகளோடு முடித்துவிடாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு செயல்பாடாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றியடைவது மட்டுமன்றி, முழு சமூகத்திலும் விளையாட்டு தொடர்பில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அவற்றை திட்டமிட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்காக திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண்பது, பயிற்சி அளிப்பது மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் வெற்றி அடைவதற்கு அவர்களைத் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் வெற்றிபெறக்கூடிய விளையாட்டு தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு அறிவும் திறமையும் நிறைந்த சிறந்த பயிற்சியாளர்கள் குழு தேவை என்றும், அதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, விளையாட்டின் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அது அத்தியாவசியமான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம், விளையாட்டு மருத்துவ நிறுவனம், தேசிய விளையாட்டு அகடமி, சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபை, ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம், தேசிய இளைஞர் படையணி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையம் உள்ளிட்ட நிறுவனங்களால் 2026ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், 2027ஆம் ஆண்டிற்கான திட்டமிடல்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்களான மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகம், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு வளாகம், கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட விளையாட்டு வளாகங்களின் நிர்மாணப் பணிகள் குறித்தும், சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கம் மற்றும் தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டன.
இலங்கையின் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறமைகளை சர்வதேச நிலைக்கு மேம்படுத்தும் நோக்கில், நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் கூடிய சிறப்பு "உயர் செயல்திறன் மையம்" (High-Performance Center) ஒன்றை நிறுவுவதற்கான பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டறிந்தார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அணில் ஜயந்த பெர்னாண்டோ, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக்க, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





