
admin
Apr 17, 2026
உள்ளூர்
நிலக்கரி கொள்முதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் அல்லது அதன் சார்பாக இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டபோதும் மற்றும் மின் உற்பத்தியின்போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட, தேசிய அரச சபையின் 1978 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைய இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்கவும் உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே, மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் பி.வி. பந்துலசேன நியமிக்கப்படுள்ளார்.
ஆணைக்குழுவுக்கு பின்வரும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் செயல்முறைகளில் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா, இல்லையா என்பதை ஆராய்தல் மற்றும் அதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதா என மதிப்பிடுதல்.
குறித்த காலப்பகுதியில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதையும், கொள்முதல் செயல்முறை, விநியோக செயல்முறை, தரப் பரிசோதனை செயல்முறை, செயல்பாட்டு செயல்முறை மற்றும் பயன்பாட்டு செயல்முறை உள்ளிட்ட ஒட்டுமொத்த தொடர்புடைய செயல்முறைகளையும் விசாரணைக்கு உட்படுத்துதல்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, மின் உற்பத்தி அளவு எதிர்பார்க்கப்பட்ட வினைத்திறனுடன் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிதல்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், அந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் செயல்முறையில் சட்ட மற்றும் நிதி முறைகேடுகள்/சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்தல்.
இந்தச் செயல்முறையின் போது அறிவிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதையும், அவ்வாறு மீறப்பட்டிருந்தால் அந்த மீறல்களுக்கு எதிராகக் கொடுப்பனவுகளை நிறுத்துதல் அல்லது ஏனைய இழப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனவா என்பது குறித்து ஆராய்தல்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், அதற்காகப் பொறுப்புக் கூற வேண்டிய அரசியல் அதிகாரம், அரச அதிகாரிகள், லங்கா நிலக்கரி நிறுவன அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைத்தல்.
இவ்வாறான முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்த்து, முறையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி தொடர்பில் பதிவாகக்கூடிய ஏனைய முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் குறித்து அறிக்கையிடுதல் மற்றும் அத்தகைய நிலைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடுதல் ஆகியன இந்த ஆணைக்குழுவுக்கு வழங்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





