Search

puja

Jul 31, 2026

உள்ளூர்

கைவிடப்பட்ட திட்டங்களை உடனே நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு!

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் பிரிவு, கலாசார அலுவல்கள் பிரிவு மற்றும் தேசிய மரபுரிமைகள் பிரிவு ஆகிய பிரதான 03 பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட  9,535.45 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகள் மற்றும்  5,401.40 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் இது வரைகால முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்,  2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்  குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

 

 

 

 

 

கிராமப்புற வழிபாட்டுத் தலங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் கீழ் விகாரைகளில் தானசாலைகளை நிர்மாணித்தல், நீர் வசதிகளை மேம்படுத்துதல், அத்துடன் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களின் அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் அனர்த்தங்களால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை மீளக் கட்டமைத்தல் என்பவற்றுக்காக 601 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

இந்திய நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு சூரியசக்தி மின் வசதிகளை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழுந்துள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்கி இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

 

கலாசாரப் பிரிவின் கீழ் 521 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் கலாசார நிலையங்கள் ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது ஆராயப்பட்டதுடன், அமரதேவ நினைவிடத்தின் நிர்மாணப் பணிகள், தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பிரதான கட்டிடத்தில் நடமாடும் அடுக்குகள் தொகுப்பு ஒன்றை நிறுவுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

 

நமது பாரம்பரியங்களையும் வரலாற்றையும் தற்கால சந்ததியினருக்கு நெருக்கமாக்குவதற்காக தேசிய அருங்காட்சியகம் மற்றும் சுவடிகள் காப்பக திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களை துரிதப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெறும் கட்டிடத்திற்குள் மாத்திரம் சுருங்கிவிடாது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றை நேரடியாக அனுபவிக்கும் வகையில் அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

2018-2019 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த அரசாங்கங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த தேசிய கலாபவனத்தை நவீனமயமாக்கல், ஜோன் டி சில்வா ஞாபகார்த்த நாடக அரங்கம் மற்றும் அமரதேவ நினைவிடம் போன்ற திட்டங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவற்றை உடனடியாக நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி இதன்போது தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

குறிப்பாக, தேசிய கலாபவனத்தின் நிர்மாணப் பணிகளில் காணப்பட்ட தரம் குறைந்த தன்மைகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஏற்பட்ட தாமதங்களைத் தடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

 

தேசிய நூலகக் கட்டிடத்தின் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் கலை மன்றம் மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கீழ் செயற்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு உரிய சொத்துகளை நிர்வகிப்பதில் கடந்த காலத்தில் நிலவிய பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தியதோடு, மக்கள் சொத்துகள் ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கும், நட்டமடையும் அல்லது பயனற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் குறித்து முறையான மீளாய்வு செய்து புதிய சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

 

மேலும், தற்போது புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒரே பணியைச் செய்யும் நிறுவனங்கள் இருப்பதால், அத்தகைய நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்தார்.

 

2027 சமகாலக் கலை மற்றும் கலைஞர்களுக்காக முறையான ஒரு பொறிமுறையைக் கொண்ட புதிய நிதியம் ஒன்றை நிறுவுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், விஞ்ஞான அடிப்படையின் கீழ் கலைத் துறையையும் கலைஞர்களையும் ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு அப்பணிகளைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

 

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, புத்த சாசன,

 

 

 

 

 

 

 

சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All