Search

admin

Jun 24, 2026

உள்ளூர்

விமானப்படை பயிற்சி திறனை உயர்த்தும் புதிய ஹெலிகொப்டர்கள்!

இலங்கை விமானப்படையின் விமானிகள்  பயிற்சி திறனை மேம்படுத்துவதற்கும், விமான செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட  TH-57 'சீ ரேஞ்சர்' (Sea Ranger) ரக  10  பல்பயன்பாட்டு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் ரத்மலானை விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

 ரத்மலானை விமானப்படை தளத்திற்கு இன்று (23) பிற்பகல் வருகை தந்த ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து ஹெலிகொப்டர்களை பார்வையிடுவதிலும் ஜனாதிபதி இணைந்து கொண்டதுடன், பணியாளர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

 இதன்போது இருதரப்பு ஒப்பந்தமொன்றும் கையெழுத்திடப்பட்டதுடன், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் (General Kevin Schneider) ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

 இந்த TH-57 'சீ ரேஞ்சர்' விமானங்கள் கொண்டுள்ள பல்பயன்பாட்டுத் திறன்களின் காரணமாக, எதிர்காலத்தில் பல துறைகளின் ஊடாக இவற்றை செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த TH-57 விமானப் படைப்பிரிவின் மூலம் அனர்த்த நிவாரண சேவைகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் போன்றே அவசர பொதுமக்கள் சேவை நடவடிக்கைகளுக்கும் பாரிய பயன் கிடைக்கும். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான விமானப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும் என்பதுடன், இது உலகளாவிய அமைதிக்காக இலங்கை வழங்கும் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும்.

 அமெரிக்காவிலிருந்து விசேட சரக்கு போக்குவரத்து வசதிகள் மூலம் 2026 ஜூன் 01 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஹெலிகொப்டர்கள், ரத்மலானை விமானப்படை தளத்தில் உள்ள விமான பொறியியல் பிரிவில்  ஒன்று சேர்க்கப்பட்டன. அதன் பின்னர், இலங்கையின் வான்வெளி மற்றும் காலநிலைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, மார்ஷல் ஒஃப் த எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும், விமானப்படை பணிப்பாளர் சபையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  அமெரிக்க தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் போல் கபூர் (Paul Kapur), அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹாவல் (Jayne Howell) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மெத்யூ ஹவுஸ் (Matthew House) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All