
admin
May 23, 2026
உலகம்
இந்தியாவில் மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் லீற்றரொன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான தொகையை உயர்த்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில், கடந்த 10 நாட்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதன்படி, தலைநகர் புதுடெல்லியில் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 87 சதத்தினால் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 51 சதமாகவும், டீசல் லீற்றரொன்றின் விலை 91 சதங்கள் உயர்த்தப்பட்டு 92 ரூபாய் 49 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஒரே வாரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்றாவது உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முறைக்கான 2 ரூபாய் விலை குறைப்பைத் தவிர, இந்தியாவில் எரிபொருள் விலைகள் பெருமளவில் மாற்றமின்றி ஸ்திரமாகவே காணப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட கொந்தளிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக இந்தியன் ஆயில் கோர்ப்பரேஷன் உள்ளிட்ட அரச எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் தினசரி விலை திருத்த நடைமுறையை 2022 இல் நிறுத்தி வைத்திருந்தன.
இருப்பினும், தற்போதைய போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் சராசரியாக ஒரு பீப்பாய் 69 டொலராகக் காணப்பட்ட இந்தியாவின் மசகு எண்ணெய் கொள்முதல் விலை, சமீபத்திய மாதங்களில் 113 முதல் 114 டொலர் வரை உயர்ந்துள்ளது.
இந்தியா தனக்குத் தேவையான மசகு எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை இறகுமதி மூலமே பூர்த்தி செய்வதனால், சர்வதேச சந்தையின் இந்த விலை மாற்றங்கள் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





