
Rebecca
Dec 27, 2025
உள்ளூர்
கல்வி மற்றும் விளையாட்டு மூலம் போதைப்பொருளை இல்லாதொழிக்கலாம்!

கல்வியும்,விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விடயங்களுக்கு இடமிருக்காது. எனவே, கல்வி மற்றும் விளையாட்டு மூலம் போதைப்பொருளை இல்லாதொழிக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையில் இன்று காலை வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கல்விக்காக எமது சமூகம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கின்றது. முதலாம் ஆண்டு முதல் உயர்தரம் வரை தமது பிள்ளைகளுக்காக தாய்மாரும் மீண்டும் கல்வி கற்கின்றனர். தமது பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக கஷ்ப்படுகின்றனர்.
கல்வியில் யாழ்ப்பாணத்துக்கென தனி இடம் - தனித்துவம் உள்ளது. சிறந்த கல்விமான்கள் உருவாகியுள்ளனர். எனவே, கல்வியில் நாம் பின்னடைந்துவிடக்கூடாது. இது விடயத்தில் எமது மாணவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
அறிவு பசிக்கு கல்வியே சிறந்த தீர்வு. அதேபோல விளையாட்டு துறை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டு மிக முக்கியம். கல்வி, விளையாட்டுமூலம் ஆரோக்கியமான சமூகத்தை நாம் உருவாக்கும்போது போதைப்பொருள் தானாகவே அழிந்துவிடும். கல்வியில் பின்தங்கி இருப்பவர்களே கலாசார ரீதியிலும் பின்னடைந்து தவறான வழியில் செல்லும் நிலை காணப்படுகின்றது என்றார்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 14 கலைமன்றங்களுக்கு ஆற்றுகைப் பொருட்களும், 100 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், அமைச்சின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






