
admin
Jun 7, 2026
உள்ளூர்
ஒரு பாடலுக்காக கைது செய்தது அதிர்ச்சி!

வட மாகாணத்தைச் சேர்ந்த பாடகர் சங்கீத்சன் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போது அமைச்சர்களாகவும் உயர்மட்டப் பொறுப்புகளில் உள்ளவர்களாகவும் இருக்கும் பலர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உட்பட, கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி எங்களுடன் இணைந்து கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்று அதே சட்டம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும் .
மேலும், ஒரு பாடலுக்காக ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது வெறுமனே ஒரு எழுச்சிப் பாடல் மட்டுமே. அதனை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது மிகவும் மோசமான மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், இவ்வாறான சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





