Rebecca
Dec 16, 2025
உள்ளூர்
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து - வெளிநாடு செல்ல தடை
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு பயண தடை விதித்து எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியது.
இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 08-12-205 திங்கட்கிழமை அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ஆம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று எடுத்து கொண்டபோது தேரர் ஆஜராகாத நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று ஆஜராக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயண தடை விதித்து கட்டனை பிறப்பித்து உத்தரவிட்டு எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







