தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் – துனித் உணர்வுபூர்வ உரை.

தனது தந்தையின் திடீர் மறைவு காரணமாக ஆசியக் கிண்ணத் தொடருக்கு இடையில் நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, இன்று (20) காலை இலங்கை அணியுடன் மீண்டும் இணைவதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
– வெளியேறும் முன் கருத்து தெரிவித்த துனித் வெல்லாலகே,
தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “சிறு வயதிலிருந்தே என் தந்தை என் கிரிக்கெட் கனவுகளுக்காக காலையில் இருந்து இரவு வரை என்னோடு உழைத்தார். அவருடைய ஆசை – நான் ஒரு சிறந்த வீரராகி நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே. இன்று நான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் தரத்திற்கு வந்துள்ளேன். இது அவரது தியாகத்தால் மட்டுமே சாத்தியமானது,” என்று இலங்கை அணியின் இளம் வீரர் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.
“ஆசியக் கிண்ணத் தொடரில் எங்களுக்குக் கூடுதலான போட்டிகள் உள்ளன. என் அணிக்கு நான் 100% பங்களிப்பு வழங்குவேன் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்துடன், “சனத் ஜயசூரியா சார், அணித் தலைவர் சரித் அண்ணா மற்றும் இலங்கையரின் ஆதரவு எனக்கு பெரும் உற்சாகமாக உள்ளது. இத்தகைய சவாலான சூழ்நிலையில் வழங்கப்பட்ட ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன்,” எனவும் அவர்தெரிவித்துள்ளார்.




