2026 September 4, Friday ⛅ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
15 மனுக்களின் விசாரணையை முடித்த உயர்நீதிமன்றம்!ஊழல் எதிர்ப்புத் திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்மானம் எதிர்பார்ப்பு!பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி குளோரியா ஸ்டெய்னம் காலமானார்!வறட்சியால் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!பொலிஸாருக்கு புதிய பதவி உயர்வு முறைமை – ஜனாதிபதி!உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை இன்று குறைகிறது!இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜரான ஜோன்ஸ்டன் கைது!CPL சாதனையை முறியடித்த தசுன் ஷானக!

பொலிஸாருக்கு புதிய பதவி உயர்வு முறைமை – ஜனாதிபதி!

உள்ளூர்September 4, 2026 · 2 hours முன்4
பொலிஸாருக்கு புதிய பதவி உயர்வு முறைமை – ஜனாதிபதி!

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காக சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இடர் கொடுப்பனவை வழங்குவதற்கும், தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஆட்சேர்ப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் நேற்று (04) பிற்பகல் நடைபெற்ற 160வது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மோதல் சூழ்நிலைகள், தொற்றுநோய்கள் போன்ற பொது மக்கள் பேரழிவுகளை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பொது மக்களுக்காகவும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் இலங்கை பொலிஸார் ஆற்றிய மகத்தான பங்களிப்பை ஜனாதிபதி இங்கு பாராட்டினார். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இலங்கை பொலிஸாருக்கு , போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் தேசிய பொறுப்பு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தொழில்முறை பொறுப்புக்கு அப்பாற்பட்ட சமூகப் பொறுப்பாகக் கருதி அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு ஜனாதிபதி அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் அதிக அளவிலான போதைப்பொருள் சோதனைகள் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டமை, வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 74 ஆயுதமேந்திய குற்றவாளிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் நாட்டுக்குக் கொண்டு வந்தமை ஆகியவற்றைப் பாராட்டிய ஜனாதிபதி, இந்நாட்டை குற்றங்களின் இராஜ்யத்தில் இருந்து அமைதியான நாடாக மாற்றுவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகபட்சமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

160 ஆவது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியை, பொலிஸார் அணிவகுப்பு மரியாதையுடன் பெருமையுடன் வரவேற்றனர். மக்கள் சேவைகளை திறமையாகவும் விரைவாகவும் வழங்குவதற்கும், பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான தகவல்பரிமாற்றத்தை முறைப்படுத்துவதற்கும் “SRI LANKA POLICE MOBILE APP” செயலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்ட www.police.lk இணையதளமும் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை பொலிஸின் 160 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை என்பன ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நீண்டகால சேவை அடிப்படையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கு கீழ் உள்ள 1,489 பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 153 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டதோடு இதனை அடையாளப்படுத்தும் வகையில் பதவி உயர்வு கடிதங்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

160 ஆவது பொலிஸ் தின நிகழ்வில் பங்கேற்றமைக்காக இலங்கை பொலிஸின் கௌரவத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

பொலிஸின் நீண்ட வரலாற்றில், நமது நாட்டில் ஏற்பட்ட பல்வேறு யுத்த மோதல்கள், அதேபோன்று இயற்கைப் பேரழிவுகள், தொற்றுநோய்கள் போன்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நமது நாட்டின் பொதுமக்கள் பேரிடர்களைச் சந்தித்த ஒவ்வொரு தருணத்திலும், இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்காகவும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் மிகவும் பாரிய பொறுப்பையும், மதிப்பிற்குரிய பணியையும் ஆற்றியுள்ளனர். இந்த 160 ஆண்டுகள் முழுவதும் இலங்கை பொலிஸாரால் ஆற்றப்பட்ட பணி குறித்து, நமது நாட்டின் பிரஜைகளுக்கு உங்கள் மீது மதிப்பும், கௌரவமும், நம்பிக்கையும் உள்ளது.உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த கௌரவம், அன்பு மற்றும் நம்பிக்கையை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வது உங்கள் பொறுப்பாகும்.

பொலிஸ் துறையிடம் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எழுந்துள்ள விமர்சனங்கள் அல்லது பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் இருப்பின், அவற்றை நீக்கிவிட்டு முன்னோக்கிச் செல்வதே இத்தருணத்தில் இலங்கை பொலிஸாரின் முக்கியப் பொறுப்பாகும். எத்தகைய விமர்சனங்கள், எத்தகைய குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் இருந்தாலும், இன்று மக்கள் “எங்கள் பிரதேசத்திற்கு ஒரு பொலிஸ் நிலையத்தைத் தாருங்கள்” என்றே கேட்கிறார்கள். அந்த மக்களின் அமைதியும் பாதுகாப்பும் உங்களிடமே உள்ளது என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

எங்காவது உள்ள ஒரு உப பொலிஸ் நிலையத்தை அகற்றத் தயாரானால் அதனை அகற்ற வேண்டாம் என்று மக்கள் போராடுவர். உங்கள் மீது அவர்களுக்கு உள்ள கௌரவமும் நம்பிக்கையும்தான் இதற்குக் காரணம். எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், இன்றும் நமது நாட்டின் பிரஜைகள் உங்களைக் கௌரவிக்கிறார்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பொலிஸ் துறை ஆளாவதற்குப் பொறுப்பான அதிகாரிகளும் இருந்துள்ளனர் என்பது யாருக்கும் இரகசியமல்ல. இலங்கை பொலிஸ் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது என்றால், அந்த அவநம்பிக்கை உருவாவதற்குக் காரணமான விடயங்கள் இன்று நம் முன்னே வெளிப்பட்டு வருகின்றன.எனவே, தற்போதைய இலங்கை பொலிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அதிகாரிகளும் தங்கள் தொழிற்துறையின் கௌரவத்தையும், பொதுமக்கள் உங்கள் தொழில் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பலமாகப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதை தமது பொறுப்பாகக் கருத வேண்டும்.

நமது நாட்டில் உள்நாட்டுப் போர் நிலவியபோது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தபோது, உங்கள் கடமை அதை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.பொதுமக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு இயற்கைச் சீற்றமாக இருந்தபோது, உங்கள் கடமை அந்தத் திசையை நோக்கி நகர்ந்தது. இயற்கையான தொற்றுநோயாக இருந்தபோது, உங்கள் கடமையின் முதன்மைப் பணி அந்தத் திசையை நோக்கியே இருந்தது.

நமது சமூகத்தை ஆக்கிரமித்துள்ள பாரிய பேரழிவை நோக்கிப் பார்க்கும்போது, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மையான பணி என்ன? வாகன நெரிசலைச் சீர்செய்வது நாம் செய்ய வேண்டிய ஒரு முதன்மையான பணியாகும். பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்குவது ஒரு முதன்மையான பணியாகும். ஆனால், இவை அனைத்தையும் விட மேலாக இருப்பது இந்த போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதாகும். அதுவே தற்போதைய பொலிஸாரின் மிக முக்கிய அரச கடமை என நாம் நம்புகிறோம்.

ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதும் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதும் உங்கள் கடமையின் ஒரு பகுதியாகும்.உங்களுக்குக் கடமையின் ஒரு பகுதியோடு சேர்த்து சமூகப் பொறுப்பும் உள்ளது.

எனவே, இத்தருணத்தில் நமது நாடு மற்றும் நமது சமூகத்தைப் பற்றி சிந்தித்து, கடமைக்கும் அப்பாற்பட்ட சமூகப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் இந்நாட்டின் பிரஜைகள். உங்களது பெற்றோர்கள், உங்களது உறவினர்கள், உங்களது பிள்ளைகள் இந்தச் சமூகத்தில்தான் வாழ்கிறார்கள்.

ஆனால், இந்தச் சமூகத்தில், முழுமையாகப் பரவிக் கொண்டிருப்பது ஒரு பயங்கர அரக்கனாகும். இந்த போதைப்பொருளும், அதனுடன் பிணைந்துள்ள ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களும் தான் அந்த அரக்கன். அந்த பயங்கர அரக்கனை நாம் இந்த நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும்.

உங்கள் கோணத்தில் பார்த்தால் அது உங்களின் கடமை. சமூக கோணத்தில் பார்த்தால் அது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சமூகப் பணியாகும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்த அரக்கனை நமது நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான தலையீடும் பங்களிப்பும் அவசியமாகும். சமூகத்தைப் பாதித்து வரும் போதைப்பொருள் எனும் கொடிய அரக்கனையும், ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களையும் கட்டுப்படுத்துவதற்கு பங்களிக்குமாறு இந்த விசேட நாளில் உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பொறுப்பைத் தமது தோள்களில் சுமந்துள்ளவர்களில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு சில அதிகாரிகளும் இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று, அச்சத்தின் காரணமாக இந்த வலையமைப்பின் இரையாக மாறியுள்ள அதிகாரிகளும் இருக்கின்றனர். மேலும் சிலர் பணத்துக்கு விலைபோயுள்ளனர்.

இந்த இரு தரப்பினரையும் உடனடியாக அச்சத்தை கைவிட்டு, பணத்திற்கு விலைபோகாத அதிகாரிகளாக மாறுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், நீங்கள் உங்களது சீருடையை கழற்ற வேண்டும். இல்லையெனில், உரிய விசாரணைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சீருடையை கழற்றச் செய்வதற்கான பொறுப்பு இலங்கை பொலிஸின் ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் உள்ளது என நான் நம்புகிறேன். மிகுந்த கௌரவத்தைக் கொண்ட பொலிஸ் சேவை, இந்த ஒரு சிலரின் செயற்பாடுகளால் அவப்பெயருக்கு உள்ளாகக் கூடாது என நான் நம்புகிறேன்.

உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த கௌரவமும் மதிப்பும் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் அதிகளவிலான போதைப்பொருள் சுற்றிவளைப்புகளையும் கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நீங்கள் பங்களித்துள்ளீர்கள்.

அதன்படி, 5,255 கிலோகிராம் ஹெரோயின், 9,966 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 44,684 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 16.2 மில்லியன் போதை மாத்திரைகள் மற்றும் கெப்ஸ்யூல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எமது இளம் தலைமுறையினர் மற்றும் பாடசாலை மாணவர்களில் எத்தனை பேர் இந்தப் பேரழிவுக்கு இரையாகியிருக்கக் கூடும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எனவே, இந்த விடயத்தில் நீங்கள் ஆற்றிய பணிக்காக எமது பாராட்டுகள் உங்களுக்கு உரித்தாகின்றன. அந்த கௌரவம் உங்களுக்குச் சேரும்.

அதேபோன்று, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 74 ஆயுதமேந்திய குற்றவாளிகள், பொலிஸ் சேவையில் உள்ள பல்வேறு புலனாய்வுப் பிரிவுகளின் ஒத்துழைப்புடனும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மிகக் குறுகிய காலத்திற்குள் மேலும் சிலரை இலங்கைக்கு அழைத்து வர எதிர்பார்க்கிறோம்.

அவர்களிடம் இருந்த நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட பெருமளவிலான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பேரழிவை ஒழிப்பதற்காக நீங்கள் மிகப் பெரிய பணியை ஆற்றி வருகின்றீர்கள். அதற்காக மீண்டும் ஒருமுறை எமது கௌரவத்தையும் பாராட்டையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

உங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த விசாரணைப் பணிகளை நீங்கள் மேற்கொள்கிறீர்கள். விசாரணைகளை நடத்தி, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு விசாரணைக்கான ஆவணங்களை அனுப்பி, சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் போது, பல சந்தர்ப்பங்களில் விசாரணை நடத்திய அதிகாரிகள் ஓய்வு பெறும் நிலை ஏற்படுகிறது.

எனவே, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேகத்திற்கு இணையாக சட்ட நடவடிக்கைகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று, கைப்பற்றப்படும் போதைப்பொருள் தொகுதிகளுக்கும் கைது செய்யப்படும் நபர்களுக்கும் இறுதியில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகிறது. முறையான வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதனால், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அதேபோன்று நீதிமன்றச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதற்காக இது தொடர்பான ஒவ்வொரு நிறுவனமும் வலுப்படுத்தப்பட வேண்டும். குற்றத்திற்குரிய முறையான தண்டனை சரியான நேரத்தில் வழங்கப்படாமை அக்குற்றத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைகிறது. எனவே, அந்த அனைத்துச் செயற்பாடுகளையும் செயற்திறனாக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அதற்காகத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக அரசியலமைப்புத் திருத்தங்கள் தேவையாயின், எமது நாட்டின் பொதுமக்களின் மற்றும் நாட்டின் நலனுக்காகவும், இளம் சந்ததியினரின் பாதுகாப்பிற்காகவும் எத்தகைய தயக்கமுமின்றி அத்தகைய அரசியலமைப்புத் திருத்தங்களைக் கூட மேற்கொள்வோம். இந்நாட்டைக் குற்றச் செயற்பாடுகள் நிறைந்த நாட்டிலிருந்து அமைதியான நாடாக மாற்றுவதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு எப்போதும் தயங்க மாட்டோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

குறிப்பாக பொலிஸ் அதிகாரிகளின் பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. இலங்கை பொலிஸுக்கு புதிதாக 10,000 பேரைச் சேர்ப்பதற்கு நாங்கள் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளோம். நீங்கள் மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். அரச ஊழியர்களுக்கான மூன்றாவது சம்பள உயர்வு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்கும். அது தவிர, பொலிஸின் அனைத்து அதிகாரிகளுக்கும் இடர் கொடுப்பனவை வழங்க நான் எதிர்பார்க்கிறேன். அதேபோல், பொலிஸ் அதிகாரிகளுக்கு தங்களது பதவி உயர்வுகள் குறித்து கவலை உள்ளது. பொலிஸில் இணையும்போதும் கான்ஸ்டபிள், திருமணம் செய்யும்போதும் கான்ஸ்டபிள், ஓய்வு பெறும்போதும் கான்ஸ்டபிள் என்று நான் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். நான் இப்போது ஜனாதிபதி. எனவே, முறையான பதவி உயர்வு வழிமுறையைத் தயாரித்து, தேவையான மனிதவளத்தை ஊக்குவிப்பதும் பாராட்டுவதும் எனது பொறுப்பாகும்.

இன்று சிரேஷ்டத்தன்மை அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படுவது போன்று, திறமைகள் மற்றும் பரீட்சைகளின் அடிப்படையிலும் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான அவசியமான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். பதவி உயர்வுகள் வழங்குவதில் பெருமளவான பதவி உயர்வுகள் தேங்கிக் கிடப்பதால், ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி பதவி உயர்வுகளை முறைப்படி வழங்குவதற்கும், பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறாதவர்களை அதே பதவியில் மேலதிகமாக நிலைநிறுத்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலங்கை பொலிஸுக்கு சிறந்த மனித வளம் தேவைப்படுவதுடன், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளும் அவசியமாகும்.

அதன்படி, கடமைக்காக சுமார் 700 மோட்டார் சைக்கிள்களையும், 200 சிங்கள் கெப் ரக வாகனங்களையும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய உதவியின் கீழ் 138 கெப் ரக வாகனங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளன. மேலும், நவீனமயப்படுத்தப்பட்ட பொலிஸ் தலைமையகம் ஒன்றை அமைப்பதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குற்றப் புலனாய்வு திணைக்களம் மிகப் பழைய கட்டிடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது.

அதனால் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் புதிய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குத் தேவையான கட்டிடத்தை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பொலிஸ் மருத்துவமனையை நவீனமயமாக்கல் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குதல், வாடகை கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்களை அரச கட்டிடங்களில் ஸ்தாபித்தல், அதிகாரிகளுக்குத் தேவையான உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல் என்பவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கீட்டை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் இலங்கை பொலிஸுக்குத் தேவையான மனித வளத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் நாங்கள் மேம்படுத்துகின்றோம். அத்துடன் நவீன தொழில்நுட்பத்தையும் உட்படுத்துகின்றோம்.

இன்று இலங்கைக் பொலிஸ் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான சில செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் விசாரணைகளுக்குப் பயிற்சியும் அறிவும் அவசியமாகும். அதனால் பயிற்சிக்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருட நடுப்பகுதி அளவில் இலங்கைக் பொலிஸுக்கு புதிய சீருடை வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். நவீன யுகத்திற்குப் பொருத்தமான ஒரு பொலிஸ் அதிகாரியை உருவாக்க வேண்டும்.

மிகவும் மரியாதைக்குரிய சேவையாக நமது பொலிஸை மாற்ற வேண்டும். நீங்கள் தொடர்ச்சியாக பொதுமக்களுடன் பழகுகிறீர்கள். நட்புமிக்க பொலிஸ் சேவைக்காக உங்களது மனநிலையை மேம்படுத்தத் தேவையான சூழலை உருவாக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அதற்கேற்ப பொதுமக்கள் பொலிஸாருடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய புதிய இலங்கை பொலிஸை உருவாக்குவோம்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன ஆகியோர் உட்பட உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் (நிர்வாகம்) சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மற்றும் இலங்கை பொலிஸின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.