நிரம்பி வழியும் புதிய ஏரி – மற்றொரு பெருவெள்ளம் வருமா?

நேபாளம், சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்நிலையில், சேற்றில் சிக்கியிருந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதோடு, தவித்துக் கொண்டிருந்தவர்களை ஹெலிகொப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளில் இரு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியின் சீனப் பக்கத்தில் கடுமையாக சேதமடைந்த ஒரு சோதனைச் சாவடி பகுதிக்கு, கயிறுகள் மூலம் இறங்கி மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
புதனன்று ஏற்பட்ட ஆரம்பகட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, இமயமலைப் பகுதியில் உருவான புதிய ஏரி ஒன்றினால் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து மீட்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
வெள்ளத்தைத் தூண்டிய பனிப்பாறை சரிவுக்குப் பின் உருவான இந்த ஏரி, தற்போது நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நேபாளத்தின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலைய சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் 100-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிக்காக அந்நாட்டு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
பேரழிவு நிகழ்ந்த பிற பகுதிகளைப் போலவே, இங்கும் தடிமனாக படிந்துள்ள சேற்றுப் படலங்கள் காரணமாக மீட்புப் பணிகள் கடினமாகின.
முன்பு பரபரப்பாக இயங்கிவந்த எல்லைக் கடக்கும் பகுதியில், மரங்கள் நிறைந்த மலைச் சரிவுகளிலிருந்து கயிறு மூலம் மீட்புக் குழுவினர் கீழே இறங்கியதாக சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சீனா சென்ட்ரல் டெலிவிஷன் தெரிவித்துள்ளது.
“நான் பார்க்கும் இடம் எங்கும் இடிபாடுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று மீட்புப் அதிகாரி ஜோ மிங்கி அரசு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் படங்களின்படி, சீனாவுக்குள் நுழைய அல்லது வெளியேற பயணிகள் எல்லைக் கட்டுப்பாட்டு சோதனைகளைக் கடந்து செல்லும் பகுதி முழுமையாக அழியப்பெற்று, சேறு நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.
நேபாளத்தில் இந்த வெள்ளப் பெருக்கினால் 579 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பின்னர் நேபாள பொலிஸார் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை 553 ஆகக் குறிப்பிட்டனர். சீனப் பகுதியில் கிராமங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது தொடர்பான தகவல்களை அரசு ஊடகங்கள் வெளியிட்டபோதிலும், அங்கு தப்பிப் பிழைத்தவர்கள் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. மேலும் சீனப் பகுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 7 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மேலும் பல உள்ளூர்வாசிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டதால், நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 1,924 ஆக உயர்ந்துள்ளது.
சீனத் தரப்பில் 554 பேர் மாயமாகியுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மாயமான நூற்றுக்கணக்கானோரில், பணி நிமித்தமாக, மலையேற்றத்திற்காக அல்லது புனித சிகரத்திற்கு யாத்திரை மேற்கொள்வதற்காக அங்கு சென்ற வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
மற்றொரு நிகழ்வாக, பிற நாடுகளின் அழுத்தத்திற்குப் பிறகு – குறிப்பாகத் தங்கள் நாட்டுப் பிரஜைகளைக் காணவில்லை என்று கவலைப்படும் நாடுகளின் கோரிக்கையை அடுத்து – வெளிநாட்டு மீட்புக் குழுக்களும் நிபுணர்களும் மீட்புப் பணிகளுக்கு உதவ அனுமதிக்கப்படுவர் என நேபாளம் தனது முந்தைய முடிவை மாற்றி வெள்ளிக்கிழமை அறிவித்ததாக முன்னணி ஆங்கில நாளிதழான ‘ தி காத்மண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.




