2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய 5 நவீன மம்மோகிராபி இயந்திரங்கள்!

உள்ளூர்May 31, 2026 · 3 months முன்1
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய 5 நவீன மம்மோகிராபி இயந்திரங்கள்!

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக 5 நவீன மம்மோகிராபி (Mammography) பரிசோதனை இயந்திரங்களை முக்கிய அரச மருத்துவமனைகளுக்கு அறிமுகப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.

மொத்தமாக 765 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நவீன மருத்துவ உபகரணங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனை , காலி கராப்பிட்டிய தேசிய மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை , அனுராதபுரம் போதனா மருத்துவமனை மற்றும் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவனை ஆகியவற்றுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒரு இயந்திரத்தின் பெறுமதி 153 மில்லியன் ரூபாவாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் கூடிய ‘சுகாதாரத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்’ (Health System Enhancement Project) ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மத்தியில் மிகவும் பொதுவான புற்றுநோய் பாதிப்பாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோயை, ஆரம்ப கட்டத்திலேயே மிகவும் துல்லியமாகக் கண்டறிவதற்கும், அதற்கான தொடர் சிகிச்சைச் சேவைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த புதிய தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைகளின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு மம்மோகிராபி இயந்திரங்களை அங்கு நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள அரச மருத்துவமனைகளில் 16 மம்மோகிராபி இயந்திரங்கள் மாத்திரமே பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த புதிய சேர்க்கைகளுடன் அதன் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள முக்கிய போதனா மற்றும் பொது மருத்துவமனைகளில் தற்போது இச்சேவை வழங்கப்பட்டு வந்தாலும், இதற்கான கேள்வி அதிகமாகக் காணப்படுவதால் நோயாளர்கள் வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

இந்த புதிய இயந்திரங்களின் வருகையினால் நோயாளர்களின் காத்திருப்பு நேரம் குறைவடைவதுடன், பொதுச் சுகாதாரத் துறையில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.