jino

Aug 22, 2025

உலகம்

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும் - த.வெ.க தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் நேற்று (21) மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இம் மாநாட்டில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றியுள்ளார்.

-த.வெ.க தலைவர் தனது உரையில் தெரிவிக்கையில்,

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும்.

மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி நமக்கு பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.

நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள்; இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்து, வெல்வோம்.

யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? என்று தனக்குறிய பாணியிலே மாஸாக பேசினார்.

மேலும், பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது.

234 தொகுதிகளிலும் உங்கள் வீடுகளில் உள்ளவர்கள்தான் வேட்பாளர்களாக நிற்பார்கள். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் இந்த கட்சியின் சின்னம். தமிழ் மக்கள் யாவரும் என் இரத்த உறவுகள். நான் ஒன்றும் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் வந்துள்ளேன்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான். தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். மக்களை மதிக்கின்றேன். மக்களை வழிபடுகின்றேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க உங்கள் விஜய் வந்திருக்கின்றேன். வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கின்றேன். மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன்.

- மேலும் மாநாட்டில் தனது உரையில், தமிழ் நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினுக்கு சரமாரியான கேள்விகளை தலைவர் விஜய் எழுப்பினார்.

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அது மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடமாட்டோம்.

ஸ்டாலின் அங்கிள், உங்ககிட்ட கேட்க சில கேள்விகள் இருக்கு, அதுக்கு பதில் சொல்லுங்க.

உங்களுடைய ஆட்சியில் ஊழல் இல்லாம இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?

பொது மக்களுக்கு பாதுகாப்பு இருக்கா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா?

சொல்லுங்க மை டியர் அங்கிள்.

டாஸ்மாக்ல மட்டுமே ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல். உலகிலேயே மிஸ்டர் கிளீன் ரெக்கார்டு உங்களுக்கும், உங்க கூட இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் கொடுக்கணும்.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? எல்லாவற்றையும் முடி மறைத்து விடலாம் என பார்க்கிறீர்களா?

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என அவர்கள்களே கதறுகிறார்களே, அது உங்க காதுகளில் கேட்கிறதா? இதில், உங்களை எல்லோரும் அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்கிறீர்கள்.

பெண்களுக்கு மட்டுமா பொய் வாக்குறுதி கொடுத்தீங்க. அரசு ஊழியர்கள், விவசாயிகள், பரந்தூரில் விமான நிலையம் வராது என அந்த கிராம மக்கள், மீனவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என எல்லோருக்கும் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி இருக்கிறீர்கள். வெரி வெரி வொர்ஸ்ட் ஸ்டாலின் அங்கிள்”

என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைவர் விஜய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

முக்கிய செய்திகள்

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp