MuSHArraf

Aug 18, 2025

பல்சுவை

"பெரும் எதிர்பார்ப்பை தூக்கி எறிந்த 5 தமிழ் படங்கள்!" 🎬😅

ஆகஸ்ட் 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான, நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக அதனை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சமூக ஊடகங்களில் 'கூலி' திரைப்படத்தின் திரைக்கதை, காட்சியமைப்புகள் குறித்த பல்வேறு 'மீம்கள்' மற்றும் விமர்சனங்களைப் பார்க்கமுடிகிறது.

"திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் லாஜிக் இல்லை, ரஜினி மற்றும் சௌபின் ஷாஹிர் தவிர்த்து பிறரது கதாபாத்திரங்களை சரியாக வடிவமைக்கவில்லை, ரஜினி என்ற பிம்பம், வன்முறைக் காட்சிகள், பிறமொழி நட்சத்திரங்களை மட்டுமே நம்பி திரைக்கதையை இயக்குநர் லோகேஷ் அமைத்துள்ளார்." என சமூக ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பல 'ட்ரோல்' (Troll) பதிவுகளையும் காண முடிகிறது.

சமூக ஊடகங்களில் 'கூலி' திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் இருந்த எதிர்பார்ப்பு இப்போது விமர்சனங்களாக, ட்ரோலாக மாறியுள்ளது. இதேபோன்று பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி பின்னர் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற திரைப்படங்களை இந்தக் கட்டுரையில் நோக்கலாம்.

தக் லைஃப் (2025)

இயக்குநர் மணிரத்னம்- நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் 1987இல் வந்த 'நாயகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும், விமர்சகர்களின் வரவேற்பையும், மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது.

37 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் என்ற திரைப்படத்திற்காக மணிரத்னம் மற்றும் கமல் மீண்டும் இணைகிறார்கள் என்ற செய்தி மட்டுமல்லாது, அதில் துல்கர் சல்மான், ரவி மோகன், கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், திரிஷா, ஆகியோர் நடிக்கிறார்கள், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பிறகு, துல்கர் சல்மான், ரவி மோகன், கௌதம் கார்த்திக் ஆகியோர் விலகிக்கொள்ள, நடிகர்கள் சிலம்பரசன், அசோக் செல்வன், அர்ஜுன் சிதம்பரம் அந்தக் கதாபாத்திரங்களை ஏற்றனர்.

திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது.

அதே பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ் மொழியையும் கர்நாடக மொழியையும் இணைத்து கமல்ஹாசன் பேசிய பேச்சு, கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாலும் இப்படம் குறித்த பரபரப்பு மேலும் அதிகமானது.

"இந்தத் திரைப்படம் நாயகனை விட சிறந்த படமாக இருக்கும். அப்படி ஒரு கதையைத் தான் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்." என்று கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

ஆனால், திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியான நாள் முதலே எதிர்மறையான விமர்சனங்களையும் கடும் ட்ரோல்களையும் எதிர்கொண்டது.

"நாயகன் போன்ற ஒரு படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அதே மாதிரியான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்க நினைத்தோம். ஆனால் ரசிகர்கள் வேறு எதையோ எதிர்பார்த்தனர். அது ஒரு தவறான புரிதலாகிவிட்டது" என்று இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் படத்தின் தோல்வி குறித்துப் பேசியிருந்தார்.

பீஸ்ட் (2022)

நடிகர் விஜய்- இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) 2022, ஏப்ரல் 2 அன்று வெளியானபோது, அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

"சென்னையில் உள்ள ஒரு பரபரப்பான வணிக வளாகத்தை தீவிரவாதிகள் குழு ஒன்று கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கடத்தப்பட்ட மக்கள் கூட்டத்தில் 'ரா' பிரிவு அதிகாரியான நாயகன் வீர ராகவனும் இருக்கிறான். அவன் தீவிரவாதிகளை வீழ்த்தி மக்களை எப்படி மீட்கிறான்" என்ற எளிய, ஆனால் ஆக்ஷனுக்கு ஏற்ற கதை தான் பீஸ்ட் என்பது அந்த முன்னோட்டம் மூலம் தெரிந்தது.

'அரபிக் குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' உள்பட திரைப்படத்தின் பாடல்களும், 'திரைத் தீப்பிடிக்கும்' என்ற தீம் இசைப்பாடலும் ஹிட்டாகின.

ஆனால், 2022 ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான 'பீஸ்ட்' மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

குறிப்பாக திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், நாயகன் 'ஃபைட்டர் ஜெட் விமானம்' ஓட்டும் காட்சிகள் இந்திய அளவில் 'ட்ரோல்' செய்யப்பட்டன. 'பீஸ்ட்' வெளியான அதேநாளில், கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் 2 வெளியாகி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

"இது முழுக்கமுழுக்க நடிகர் விஜய்க்காக எழுதப்பட்ட கதை. என்ன நினைத்தோமோ அதைத் தான் எடுத்தோம். சில சமயங்களில் அது மக்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதை அடுத்தடுத்த படங்களில் திருத்திக்கொள்வோம்" என பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்கு ஒரு நேர்காணலில் பதிலளித்திருந்தார் இயக்குநர் நெல்சன்.

விவேகம் (2017)

"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்…நீ தோத்துட்ட தோத்துட்டனு சொன்னாலும்…Never ever giveup" என்று விவேகம் படத்தின் முன்னோட்டத்தில் ரசிகர்களால் விரும்பப்பட்ட அஜித்தின் வசனமும், அந்தக் காட்சியும், திரைப்படம் வெளியான பின் பல 'மீம்களில்' ட்ரோல் செய்யப்படும் ஒன்றாக மாறியது.

விவேகம் படத்திற்கு முன், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்திருந்த வீரம், வேதாளம் திரைப்படங்களின் வெற்றி, அனிருத் இசையில் வெளியான 'சர்வைவா', 'தலை விடுதலை' பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு, வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகர் அஜீத் தன் உடல் எடையைக் குறைத்து புதிய தோற்றத்தில் நடித்தது என விவேகம் படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

திரைப்படம் வெளியான பிறகு அஜீத்தின் தோற்றம், படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் பாராட்டப்பட்டாலும், 'பலவீனமான திரைக்கதை, வில்லன் கதாபாத்திரம் எப்போதும் நாயகனை புகழ்வது, யதார்த்தத்தை மீறிய 'சூப்பர் ஹீரோ' பாணியிலான நாயக பிம்பம்' போன்ற அம்சங்களுக்காக இந்தப் படம் ட்ரோல்களை எதிர்கொண்டது.

புலி (2015)

நண்பன், துப்பாக்கி, ஜில்லா, கத்தி என நடிகர் விஜய் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் ஒரு 'ஃபேன்டஸி' திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305இல் கடவுள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சிம்புதேவனுடன் முதல்முறையாக அவர் இணைவதும், திரைப்படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப், ஸ்ரீதேவி, பிரபு, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பதும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், "இந்தப் புலி அட்ராக்டு பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி" என எதுகை-மோனையில் பேசியது ட்ரெண்டானது.

ஆனால், திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக 'புலிவேந்தன்' (விஜய்) என்ற நாயகனின் தந்தை கதாபாத்திரம் சமூக ஊடகங்களில் அதிகம் 'ட்ரோல்' செய்யப்பட்டது.

அஞ்சான் (2014)

"சூர்யாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் நான் இதுவரை கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கிறேன்" என்று அஞ்சான் படத்தின் வெளியீட்டிற்கு முன் அதன் இயக்குநர் லிங்குசாமி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது.

லிங்குசாமியின் அந்தப் பேட்டி அஞ்சான் திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கழித்தே இணையத்தில் ட்ரெண்டானது. ஆனால் அதற்கு முன்பே "திரைப்படத்தின் திரைக்கதை பலவீனமாக உள்ளது" என விமர்சகர்கள் பலரும் கூறியிருந்தனர்.

அஞ்சான் திரைப்படத்திற்கு முன் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம், ரன், பையா, வேட்டை திரைப்படங்கள் பெற்ற வெற்றியும், யுவன் இசையில் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு, துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் நடித்திருந்தது என ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என விமர்சனங்கள் தெரிவித்தன.

"அஞ்சான் திரைப்படம் என்னை மிகவும் சோதித்த திரைப்படம். தமிழ் சினிமாவில் 'சமூக ஊடக ட்ரோல்களில்' முதலில் சிக்கிய நபர் நான் தான். அதிலிருந்து மீண்டு வர எனக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. ஆனால், இன்னுமும் அந்த தாக்கம் இருக்கிறது" என 2021இல் பிபிசிக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார் இயக்குநர் லிங்குசாமி.

அஞ்சான் படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமான அவினாஷ் ராமச்சந்திரன், "கோல்டுமைன்ஸ் எனும் ஊடக நிறுவனம் ஒன்று, தனது யூடியூப் சேனலில் அஞ்சான் படத்தை இந்தி ரசிகர்களுக்கு ஏற்றாற்போல எடிட் செய்து, திரைக்கதைப் போக்கை மாற்றி வெளியிட்டது. அதை ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். எனவே அது ஒன்றும் மோசமான திரைப்படம் என்று கூறிவிட முடியாது." என்கிறார்.



Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp