MuSHArraf

Aug 22, 2025

உலகம்

காஸா நகரை கைப்பற்ற முனையும் இஸ்ரேல் - வெளியேறும் பாலத்தீனர்கள்

காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, காஸாவின் புறநகர் பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் கால்பதித்துள்ள நிலையில், தற்போதைய தாக்குதல் காரணமாக பாலத்தீனர்கள் காஸா நகரைவிட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மரணங்களையும் அழிவுகளையும் தடுக்க உடனடி சண்டை நிறுத்தம் தேவையென ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்குக் கண்டனம் வலுத்துள்ள நிலையில் இஸ்ரேல் கூறுவது என்ன?

கடந்த மாதம் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸுடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசாங்கம் முழு காஸா பகுதியையும் கைப்பற்றும் திட்டத்தை அறிவித்தது.

காஸா முனையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள காஸா நகரை முழு கட்டுப்பாட்டில் எடுக்க நெதன்யாகு முன்மொழிந்த திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, காஸா நகரில் தரைவழித் தாக்குதலுக்காக சுமார் 60 ஆயிரம் ராணுவ ரிசர்வ் படைவீரர்களை அழைக்கும் திட்டத்தை இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது.

புதன்கிழமை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Effie Defrin), "காஸா நகரத்தில் உள்ள ஹமாஸின் ஆட்சித் தளம் மற்றும் ராணுவ தளங்களை நாங்கள் இன்னும் ஆழமாகத் தாக்குவோம். நிலத்தின் மேல் மற்றும் அடியில் உள்ள பயங்கரவாத அடிப்படை கட்டமைப்புகளை அழித்து, மக்கள் ஹமாஸை சார்ந்து இருப்பதைத் துண்டிப்போம்' என்றார்.

இந்நிலையில், தற்போது காஸா நகருக்குள் முதற்கட்ட தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.

சைதூன் (Zeitoun) மற்றும் ஜபாலியா (Jabalia) பகுதிகளில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேலிய படைகள் ஏற்கனவே நுழைந்துவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸின் ஒப்புதல்படி தாக்குதலுக்கான அடித்தளம் அமைப்பதே நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் மீது போர் தொடுப்பதாகவும், சண்டை நிறுத்தத்தைத் தடுப்பதாகவும் இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேலின் செயலை அதன் கூட்டணி நாடுகளே விமர்சித்துள்ளன.

"இது இருதரப்பு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும், மேலும் முழு பிராந்தியத்திலும் நிரந்தர போர் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது" என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராங் (Emmanuel Macron) புதன்கிழமை தெரிவித்தார்.

ஜப்பானில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உடனடியாக சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவது மிக அவசியம் என்று கூறினார்.

காஸா நகரத்துக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாத வகையில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்தும். அதனைத் தடுக்க உடனடியாக சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவது மிக அவசியம். மக்கள் இடம்பெயர்வது மற்றும் மோதல்களின் தீவிரம் அதிகரித்தால், ஏற்கனவே பேரழிவு சூழ்நிலையில் இருக்கும் காஸாவின் 2.1 மில்லியன் மக்களின் நிலைமை இன்னும் மோசமடையும் அபாயம் உள்ளது என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

காஸாவில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், பாலத்தீன மக்கள் மற்றும் பணயக்கைதிகள் என இருவருக்கும் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்தது. மேலும், உடனடி சண்டை நிறுத்தத்தையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரியது.

காஸாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 50 பிணையக்கைதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் IDF மேற்கொள்வதாக டெஃப்ரின் (Defrin) தெரிவித்தார்.

இதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் இந்த தரைவழி தாக்குதலில் பாதிக்கப்படக்கூடும் என இவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.

கத்தார் மற்றும் எகிப்து 60 நாள் சண்டை நிறுத்தம் மற்றும் சில பணயக்கைதிகளை விடுதலை செய்யும் திட்டத்தை முன்வைத்துள்ளன. ஹமாஸ் இதை ஏற்றுக்கொண்டாலும், இஸ்ரேல் பாதிப் பேரை விடுவிக்கும் ஒப்பந்தத்தை மறுத்துள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் தேதியன்று இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச்செல்லப்பட்டனர். இதையடுத்து ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அதன் பின்னர், காஸாவில் குறைந்தது 62,122 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

முக்கிய செய்திகள்

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp