
Rebecca
Dec 26, 2025
உள்ளூர்
21ஆவது சுனாமி நினைவு தினம்

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 21ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும், ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் இடம்பெற்றது.
திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார்.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்
சுனாமி ஆழிப் பேரலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.





மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகளையும் சொத்துகள் இழப்புகளையும் எதிர்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் டச்பார், திருச்செந்தூர், நாவலடி மற்றும் புதுமுகத்துவாரம் ஆகியவற்றில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
சுனாமி அனர்த்தம் காரணமாக டச்பாரில் 80 பேரும், திருச்செந்தூர் பகுதியில் 243 பேரும், புதுமுகத்துவாரம் பகுதியில் 211 பேரும், நாவலடி பகுதியில் 544பேரும் உயிரிழந்திருந்த சோக தினத்தை உணர்வுபூர்வமாக மதவழிபாட்டுகளுடன் நினைவுகூர்ந்தனர்.
டச்பாரில் 80 பேரின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவுத்தூபியில் கிறிஸ்தவ வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
திருச்செந்தூரில் உள்ள நினைவுத்தூபியில் கிறிஸ்த வழிபாடுகளுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு. மக்கள் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.




மட்டு. ஓந்தாச்சிமடத்தில் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு
ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்;டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2004 சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் நினைவேந்தல்
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டு சுனாமி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையில் தேசிய பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நோக்கிலும் பேரழிவு தயார்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் என மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



சுனாமி 21ஆவது ஆண்டு நினைவு தினம் வத்திராயன் சுனாமி நினைவாலயத்தில் அனுஷ்டிப்பு......!
21ஆவது சுனாமி நினைவேந்தல் வத்திராயன் ஆழிப்பேரலை கட்டமைப்பு குழுவின் ஏற்பாட்டில் வத்திராயன் சுனாமி நினைவாலயத்தில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
இதில் பொதுச்சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் வி.யெ.நிதர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார். பின் நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் சுடர் ஏற்றி ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






